சாத்துக்குடி தரும் அழகு

‘சுவீட் லைம்’ என அழைக்கப்படும் சாத்துக்குடி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டது.

Update: 2022-10-09 13:14 GMT

இனிப்பு, புளிப்பு என இரு வகை சுவை கொண்ட இந்த பழத்தில் பொட்டாசியம், இரும்பு, கால்சியம், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி 1 ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளன. சருமத்திற்கு நலம் சேர்க்கும் தாதுக்களும் அதில் நிரம்பியுள்ளன. சருமத்தை உறுதியாகவும் வலுவாகவும் வைத்திருக்க உதவும் புரதமான கொலாஜன் தயாரிக்க வைட்டமின் சி அவசியம். சாத்துக்குடியில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் அது சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் ஆன்டி ஆக்சிடென்டுகளும் அதிகம் உள்ளன. வயது அதிகரிக்கும்போது சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை எதிர்த்து போராடவும் உதவும்.

சாத்துக்குடியில் பிளாவனாய்டுகளின் அளவும் அதிகம் உள்ளது. இவை செரிமான நொதிகள், அமிலங்கள் மற்றும் பித்தங்களின் சுரப்பை அதிகரிக்கச் செய்யக்கூடியவை. அதனால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு தொய்வின்றி நடைபெறும். மேலும் வயிற்றில் உற்பத்தி செய்யப்படும் அமில செரிமான நொதிகளை நடுநிலையாக்கும். உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றும் செயல்முறை சீரான இடைவெளியில் நடக்க வேண்டியது அவசியமானது. அப்படி நடந்தால்தான் சருமத்திற்கு சரியான ஊட்டம் கிடைக்கும். சருமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. முகப்பரு போன்ற சரும பிரச்சினைகளும் ஏற்படாமல் இருக்கும்.

சாத்துக்குடியில் உள்ளடங்கி இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் கண்புரை உருவாகும் அபாயத்தை குறைக்க உதவும். சாத்துக்குடி ஜூஸை பருகுவதோடு சருமத்திற்கு பேஷியலாகவும் உபயோகப்படுத்தலாம். சருமத்தில் படியும் கறைகளை அகற்ற உதவும். சருமத்தை பிளீச்சிங் செய்வதற்கும் சாத்துக்குடியை பயன்படுத்தலாம்.

Tags:    

மேலும் செய்திகள்