பல மாதங்களுக்கு... நீடித்திருக்கும் 'பெர்மனண்ட் மேக்கப்' கலை

அழகுக் கலை சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கு பெர்மனண்ட் மேக்கப் கலை மூலமாக தீர்வு கூறி, தனக்கென பெரிய ரசிகைகள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார் ஜாஸ்மின்.

Update: 2023-02-12 12:45 GMT

புகைப்பழக்கத்தினால் உதடுகள் கருப்பானவர்களும், சரும நோயினால் புருவத்தை இழந்த டீன்-ஏஜ் ஆண்களும், பெர்மனண்ட் மேக்கப் செய்து கொள்கிறார்கள்.

''நமக்கு எல்லோருக்குமே, மேக்கப் கலை பற்றி நன்றாக தெரியும். அதில் பலவிதமான மேக்கப் நுட்பங்கள் இருப்பதும் தெரியும். ஆனால் அத்தகைய மேக்கப், ஓரிரு நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும். ஆனால் இப்போது நிரந்தரமாக இருக்கக்கூடிய மேக்கப் கலையும் பிரபலமாகி வருகிறது. 'பெர்மனண்ட் மேக்கப்', 'செமி பெர்மனண்ட் மேக்கப்'... இப்படி முகப்பொலிவையும், சரும அழகையும் நிரந்தரமாக தக்க வைத்துக்கொள்ள, பல்வேறு முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது உலக அளவில், படுவைரலான விஷயம் என்றாலும், நம் இந்தியாவில் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்கத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக நம் தமிழ்நாட்டில் இப்போதுதான், அதுபற்றிய புரிதல் உருவாகி வருகிறது'' என்று நிதானமாக பேசத் தொடங்குகிறார், ஜாஸ்மின்.

சென்னை சாந்தோம் பகுதியை சேர்ந்தவரான இவர், டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் ரொம்ப பிரபலம். அழகுக் கலை சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கு பெர்மனண்ட் மேக்கப் கலை மூலமாக தீர்வு கூறி, தனக்கென பெரிய ரசிகைகள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். அவர், பெர்மனண்ட் மேக்கப் பற்றியும், அதனால் அவர் ஈர்க்கப்பட்டது குறித்தும் பகிர்ந்து கொள்கிறார்.

''நான் பி.காம் படித்திருக்கிறேன். இளங்கலை படிப்பிற்கு பிறகு, வேறு என்ன புதுமையான படிப்புகளை மேற்கொள்ளலாம் என்ற தேடலில்தான், எனக்கு பெர்மனண்ட் மேக்கப் பற்றி தெரியவந்தது. சிறுவயதில் இருந்தே, அழகுக் கலையில் ஆர்வம் அதிகம் என்பதால், பெர்மனண்ட் மேக்கப் பற்றிய குறுகிய கால படிப்புகளை படித்து முடித்தேன்'' என்று தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டு, பெர்மனண்ட் மேக்கப் கலை பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.

''பெர்மனண்ட் மேக்கப் என்பது, நிரந்தர அழகுக் கலை. உதாரணத்திற்கு, திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மேக்கப் செய்கிறோம் என நினைத்துக் கொள்ளுங்கள். அந்த மேக்கப் பணியில், பவுடர் பொருட்களை கொண்டு முகத்தை 'பளிச்' என மாற்றுவார்கள். உதட்டு சாயம் பூசி, உதடுகளின் வண்ணத்தை மாற்றுவார்கள். செயற்கை கண் இமைகளைப் பொருத்தி, கண் புருவங்களை நல்ல வடிவில் மாற்றி அழகாக்குவார்கள். இப்படி திருமண வரவேற்பில் நம்மை அழகாக காட்ட, நிறைய மேக்கப் வேலைகள் நடைபெறும். இவை அனைத்தும், தற்காலிகமானவை. அடுத்த சில மணி நேரங்களிலேயே முகத்தில் பூசிய பவுடர் கலைந்து விடும். உதட்டு சாயமும் அழிந்துவிடும். அதுவே, 6 மாதங்களுக்கு, ஒரு வருடத்திற்கு என நிரந்தமாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற சிந்தனையில்தான், இந்த பெர்மனண்ட் மேக்கப் கலை உருவானது'' என்பவர், மருத்துவமும், அழகுக் கலையும் சேர்ந்ததுதான் பெர்மனண்ட் மேக்கப் கலை என்கிறார்.

''காஸ்மட்டாலஜி, டெர்மட்டாலாஜி... இவ்விரு துறை சார்ந்த மருத்துவர்களுடன், அழகு கலை நிபுணர்களும், இந்த பெர்மனண்ட் மேக்கப் கலையில் முக்கியமானவர்கள். சரும அழகை மேம்படுத்துவது, முகப்பொலிவை மீட்டெடுப்பது, நிறத்தை நிரந்தரமாக மாற்றுவது... போன்றவை எல்லாம் மருத்துவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் நடக்கக்கூடியவை. ஆனால் கருப்பான இதழ்களை நிறம் மாற்றுவது, கண் புருவங்களை செயற்கை நூலிழை தைத்து நிரந்தரமாக உருவாக்குவது, கண் இமைகளை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்வது, கரும்புள்ளிகளை அகற்றுவது, பேஸ் ஒயிட்னிங், பேஸ் கலரிங்... இது போன்றவை எல்லாம் மேக்கப் கலை நிபுணர்களே செய்யக்கூடியது. இத்தகைய மேக்கப் தொழில்நுட்பங்கள், நிரந்தரமாகவே அழகை தக்க வைத்துக்கொள்ள உதவும்'' என்றவரிடம், பெர்மனண்ட் மேக்கப் கலையின் அவசியம் என்ன? என்ற கேள்வியை முன்வைத்தோம். அதற்கு அவர் பொறுப்பாக பதில் அளித்தார்.

''யோசிக்கக் கூடிய கேள்விதான் என்றாலும், சமூகத்தில் பல பெண்களும், ஆண்களும் பலவிதமான குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நிறைய பெண்களுக்கு கண் இமை அல்லது கண் புருவ முடி இயற்கையாகவே இருப்பதில்லை. அப்படி இருந்தாலும், அவை அடர்த்தியாக இல்லாமல், லேசாகவே இருக்கும். அது மிகவும் இயல்பான விஷயம்தான். இருப்பினும் சமூகத்தின் பார்வையில் தங்களையும் இயல்பாக காட்டிக்கொள்ள, அதை சரிசெய்ய ரொம்பவே மெனக்கெடுகிறார்கள். அவ்வப்போது பொருத்திக்கொள்ளக்கூடிய கண் இமைகளுக்கு பதிலாக, மைக்ரோ பிளேடிங் முறையில் நிரந்தரமாக இருக்கக்கூடிய கண் இமைகளை பொருத்திக் கொள்கிறார்கள். அதேபோலதான் உதட்டு நிறமும். எல்லா பெண்களுக்கும், உதடுகள் 'பளிச்' என்ற நிறத்தில், இருப்பதில்லை. பெரும்பாலான பெண்களுக்கு உதடுகள் அடர் நிறத்தில்தான் இருக்கின்றன. அதை உதட்டு சாயங்கள் மூலம் தற்காலிகமாக மறைப்பதற்கு பதிலாக, நிரந்தரமாக எப்படி 'பளிச்' என மாற்றுவது என யோசிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு, பெர்மனண்ட் மேக்கப் ரொம்பவே உபயோகமானதாக இருக்கும்'' என்றவர், இந்த மேக்கப் கலையை பெண்களை விட, ஆண்களும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்கிறார்.

''புகைப்பழக்கத்தினால் உதடுகள் கருப்பானவர்களும், சரும நோயினால் புருவத்தை இழந்த டீன்-ஏஜ் ஆண்களும், பெர்மனண்ட் மேக்கப் செய்து கொள்கிறார்கள். மேலும் முக அழகை மேம்படுத்த பேஸ் கிரீம்களுக்கு பதிலாக, நிரந்தர அழகை பெற பெர்மனண்ட் மேக்கப் கலைஞர்களையே நாடுகிறார்கள். மேலும் இது எளிமையான பணியே. 2 முதல் 3 மணிநேரங்களில் மேக்கப் வேலைகள் முடிந்துவிடும்'' என்றவர், இனி வருங்காலங்களில் இதற்கான வரவேற்பு அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்.

''10 ஆண்டுகளுக்கு முன்பு, மேக்கப் கலைஞர்களை தேடிப்பிடிப்பது சிரமமான ஒன்று. ஆனால் இன்று அப்படியில்லை. திரும்பிய திசை எல்லாம் மேக்கப் கலைஞர்கள் இருக்கிறார்கள். கூடவே, எல்லா பெண்களும், மேக்கப் கலையின் அடிப்படையை தெரிந்து கொண்டு, தாங்களாகவே மேக்கப் போட பழகிக் கொண்டிருக்கின்றனர். இப்படியொரு சூழலில், மேக்கப் கலையை முழுநேர தொழிலாக பார்க்கும் டீன்-ஏஜ் பெண்களுக்கு, நிரந்த மேக்கப் கலை புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.

தற்காலிக மேக்கப் கலைக்கும், நிரந்தர மேக்கப் கலைக்கும் 'பட்ஜெட்' விஷயத்தில் பெரிய வித்தியாசம் இல்லை என்பதால், இனி வருங்காலங்களில் தற்காலிக மேக்கப் கலையை விட, பெர்மனண்ட் மேக்கப் கலைக்கே மவுசு அதிகமாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு, அழகு கலை பயிற்சி நிறுவனங்கள், பெர்மனண்ட் மேக்கப் கலையையும் பயிற்றுவிக்க தொடங்கி விட்டன. நிறைய மேக்கப் கலைஞர்களும், தங்களை மேம்படுத்திக் கொள்ள பெர்மனண்ட் மேக்கப் கலை பயில்கிறார்கள்'' என்பவர், இது மருத்துவ உலகையும், அழகு கலையையும் மையப்படுத்தி இயங்குவதால், புதுமைக்கு பஞ்சம் இருக்காது என்கிறார்.

''புதுப்புது தொழில்நுட்பங்கள், புதுமையான மருத்துவ முறைகள்... என ஏற்கனவே பெர்மனண்ட் மேக்கப், வெளிநாடுகளில் பிரபலமாகிவிட்டது. இப்போது இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. ஓரிரு வருடங்களில், எல்லோரும் அறிந்த மேக்கப் கலையாக இது மாறிவிடும். மக்களின் தேவைக்கு ஏற்ப, மேக்கப் நுட்பங்களில் புதுமையான புரட்சிகளும் ஏற்படும்'' என்றவர், சின்னத்திரை-வெள்ளித்திரை நட்சத்திரங்கள், இதுபோன்ற பெர்மனண்ட் மேக்கப் கலைகளினாலேயே, நிரந்தர முகப்பொலிவு பெறுகின்றனர் என்ற கருத்துடன் விடைபெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்