வாழையும்... இந்தியாவும்...

மனிதனால் வளர்ப்புக்கு கொண்டுவரப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வரும் மிகவும் பண்டைய கால தாவரங்களில் வாழை முக்கியமானது.

Update: 2022-09-20 16:19 GMT

முக்கனிகளில் ஒன்றாகவும், பாரம்பரியம், பண்பாட்டுடன் கலந்ததாகவும் வாழை விளங்குகிறது.

விழாக்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், பண்டிகைகள் போன்றவற்றுடன் நெருக்கமான தொடர்பை கொண்டுள்ள வாழை, பண்டைய இந்திய மொழிகள் அனைத்தின் இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் பரவலாக இடம்பெற்றுள்ள ஒரு தாவரம்.

கனியாக மட்டுமின்றி வேறு பல வகையிலும் பயன்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடி டன் அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இது உலக வாழை உற்பத்தியில் கிட்டத்தட்ட 15 முதல் 20 சதவீதம். இந்தியாவில் ஏறத்தாழ 52 வளர்ப்பு வாழை ரகங்கள் உள்ளன.

வளர்ப்பு ரகங்களுக்கும், அவற்றின் இயல் முன்னோடிகளுக்கும் இடையே சில முக்கிய வேறுபாடுகள் உண்டு. வளர்ப்பு ரகங்களின் பழங்கள் உண்ண தகுந்தவை, விதைகள் அற்றவை, கிழங்குகள் (அடித்தண்டுகள்) மூலம் மட்டுமே இனப்பெருக்கம் அடையக்கூடியவை. இவற்றின் இனப்பெருக்கம் பெரிதும் மனித உதவியை சார்ந்தே உள்ளது. ஆனால் அதேநேரம், இயல் சிற்றினங்களின் பழங்கள் பொதுவாக சிறியவை, விதைகள் கொண்டவை, கிழங்கு பொதுவாக இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்தப்படுவது இல்லை.

மேற்கண்ட 52 வளர்ப்பு ரகங்களில் கிழக்கு மலைத்தொடர் பகுதியில் பின்வரும் முக்கிய வாழை ரகங்கள் காணப்படுவதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூவன், கதலி, நெய்ப்பூவன், ரஸ்தாளி, பச்சை லாடன், ரசவாழை, மொந்தன், பேயன், சம்பா, அம்ரித்சாகர், லகாடன், ஜெயன்ட் குரோவர், தெல்லா செக்கரக்கேலி உள்ளிட்டவற்றை குறிப்பிடலாம். இவற்றில் ஒரு சிலவற்றுக்கு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர் உண்டு.

வாழையின் தோற்ற வரலாற்றிலும், அதன் விரிவாக்கத்திலும், பரவலிலும் இந்தியா முக்கிய மையமாக திகழ்ந்துள்ளது. இந்தியாவில்தான் மிக அதிக எண்ணிக்கையில் கலப்பு வாழை ரகங்கள் காணப்படுகின்றன. எனவே, இந்தியாவும், மியான்மர், தாய்லாந்து, இலங்கை போன்ற நாடுகளும் பெரும்பாலான வாழை ரகங்களின் தோற்றம் கொண்ட பகுதிகளாகும். நம் நாட்டில் தோன்றிய வாழை ரகங்கள், விரிவடைந்து, வெளி நாடுகளிலும் பரவியுள்ளதற்கு முக்கிய சான்றுகள் உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்