தெம்பு தரும் ஊட்டச்சத்து மற்றும் உணவியல் நிபுணர் படிப்பு
ஊட்டச்சத்து நிபுணத்துவம் தொடர்பான படிப்புகள் இளங்கலை , முதுகலை, டிப்ளமோ மற்றும் முதுகலை டிப்ளமோ ஆகிய பல நிலைகளில் இருக்கின்றன.இத்துறையில் ஆர்வம் உள்ள மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பை தொடர்கின்றனர். உணவியல் துறை என்பது இப்போது ஊட்டச்சத்து அறிவியல், உணவு தொழில்நுட்பம், வளர்சிதை மாற்றம், விலங்கு ஊட்டச்சத்து மற்றும் உணவு அறிவியல் போன்ற பிற உணவு அம்சங்களில் கவனம்செலுத்தி வருகின்றது
உணவியல் நிபுணத்துவ படிப்பின் கால அளவு
* இளங்கலை பட்டப்படிப்பு - மூன்று ஆண்டுகள், முதுகலை பட்டப்படிப்பு- இரண்டுஆண்டுகள், டிப்ளமோ படிப்புகள்- ஒருவருடம்
* ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் உணவுமுறை தொடர்பான சான்றிதழ் படிப்புகள்- சில மணி நேரங்கள் முதல் ஒரு வருட காலம்
உணவுமுறை படிப்புகளின் வகைகள்
* சான்றிதழ் * டிப்ளமோ
* இளங்கலை * முதுகலை * முனைவர் படிப்புகள்
பி.எஸ்சி. ஊட்டச்சத்து படிப்புகள்:
பி.எஸ்சி. விருந்தோம்பல் ஆய்வுகள், பி.எஸ்சி. ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, பி.எஸ்சி.ஊட்டச்சத்து மற்றும் பயன்பாடு
உணவு முறை திட்டம் என்பது பலதரப்பட்ட ஆய்வுத் திட்டங்களை உள்ளடக்கியதாகும். இதில் பொதுவாக பலதரப்பட்ட உடல் நலம் மற்றும் மருத்துவம் தொடர்பான துறைகள் குறித்து கற்பிக்கப்படுகின்றது.முக்கிய பாடத்திட்டங்கள் முதல் வருடத்திலும் அடுத்து வரும் வருடங்களில் ஊட்டச்சத்து குறித்த பாடங்கள் விரிவாகவும் கற்பிக்கப்படுகின்றது.
இளங்கலை உணவுமுறை பட்டப்படிப்பு(பிஎஸ்சி ஊட்டச்சத்து , பிஎஸ்சி உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து)
பன்னிெரண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை கட்டாய பாடங்களாக படித்து 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இளங்கலை பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும். அதேபோல் உணவு மற்றும் ஊட்டச்சத்து, சுகாதார கல்வி போன்ற தொடர்புடைய படிப்புகளில் சான்றிதழ் அல்லது டிப்ளமோ படிப்புகளை படித்தவர்களும் இத்துறை இளங்கலை பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். இது முழு நேரம் படிக்கக்கூடிய மூன்று வருட பட்டப்படிப்பு ஆகும்..இந்த படிப்பு ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை அறிவியல் துறையில் அதிக கவனம் செலுத்துகிறது.. அதுமட்டுமல்லாமல் மக்கள் எடுத்துக் கொள்ளவேண்டிய சரியான உணவு, உணவு மேலாண்மை, சீரான உணவின் கூறுகள், உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மேலாண்மை போன்ற பல தலைப்புகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வுகளை நடத்தி அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை முறையை நடத்துகின்றன.இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் இத்துறை தொடர்பான பட்டப்படிப்புகள் சிறப்பாக வழங்கப்படுகின்றன
இளங்கலை பாடத்திட்டங்கள்
தகவல் தொடர்பு திறன் மற்றும் ஆளுமை மேம்பாடு,பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து 1,உணவு மற்றும் ஊட்டச்சத்து அறிமுகம், உணவு வேதியியல், நுண்ணுயிரியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து, கணினி அடிப்படைகள்,பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து 2, ஊட்டச்சத்து உயிர்வேதியியல், மனித ஊட்டச்சத்து, தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம், குடும்ப உணவுத் திட்டமிடல் , மனித உடலுக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம், உணவு நுண்ணுயிரியல், உணவு அறிவியல், அடுமனை மற்றும் மிட்டாய்களின் உணவுத்தரம் மற்றும் உத்தரவாதம், உணவு பாதுகாப்பு,வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், உணவு தர சோதனை முறைகள், தொழில்துறை மேலாண்மை மற்றும் திட்டமிடல், சமச்சீர் உணவின் முக்கியத்துவம்,சுற்றுச்சூழல் கல்வி,சுற்றுச்சூழல் கல்வி மற்றும் நெறிமுறைகள்,உணவு உயிரி தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு,உணவு முறை,நிர்வாகக் கோட்பாடுகள், தினசரி நுகர்வில் சமநிலை உணவைப் பராமரித்தல்,உணவு சேவை மேலாண்மை, உணவு பேக்கேஜிங் முறைகள்,உணவு சந்தைப்படுத்தலில் இருக்கும் நுட்பங்கள்,நோயாளிகளுக்கான உணவு ஆலோசனை, கருத்தரங்கு, பயிற்சி.
வேலைவாய்ப்பு
ஊட்டச்சத்து என்பது அறிவியலின் முக்கிய பிரிவாக இருப்பதால், இத்துறை இளம் பட்டதாரிகளுக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமே வேலை வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கின்றன..நீரிழிவு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் என பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவு முறைகளை வழங்கக்கூடிய நிபுணத்துவம் பெற்ற பட்டதாரிகளுக்கு உலகம் முழுவதுமே நல்ல சம்பளத்தில் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.ஊட்டச்சத்து தொடர்பான பட்டப்படிப்பு அல்லது முதுகலை முடித்த பிறகு, ஒருவர் மருத்துவ உணவியல் நிபுணர், குழந்தை உணவு நிபுணர், உணவு ஆலோசகர் போன்றவர்களாக வேலை செய்ய முடியும். ஊட்டச்சத்து நிபுணர்களாக, இருக்கும் இத்துறை பட்டதாரிகள் நோயாளிகளுக்கு தேவையான உணவு மற்றும் ஊட்டச்சத்தின் ஆரோக்கியம் குறித்த சரியான ஆலோசனைகளை வழங்குகிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை இவர்கள் திட்டமிட்டு வழங்குகிறார்கள். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், உடற்பயிற்சி நிலையங்கள் போன்றவற்றில் ஊட்டச்சத்து நிபுணர், மருத்துவ பிரதிநிதி,ஊட்டச்சத்து ஆலோசகர்,கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள், உணவுத் துறையில் ஆராய்ச்சியாளர்கள் போன்ற பதவிகளை வகிக்கிறார்கள்.துவக்கத்தில் ஆண்டுக்கு இத்துறை பட்டதாரிகள் குறைந்தபட்சம் ஐந்து லட்சம் முதல் சம்பளம் பெறுகிறார்கள்.
இத்துறை முதுகலைப் பட்டதாரிகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை, சுகாதாரத்துறை, என்.ஜி.ஓக்கள்,அரசாங்கத் துறை மற்றும் நிறுவனங்கள், கல்வித் துறை நிறுவனங்கள் போன்றவற்றில் பணி அமர்த்தப்படுகிறார்கள். இவை மட்டுமல்லாது இத்துறை பட்டதாரிகள் தனியாக கிளினிக்குகளைத் துவங்கி சிறப்பாக சேவை செய்ய முடியும்.