மெர்சிடஸ் இ.கியூ.எஸ்.
பிரீமியம் சொகுசு கார்களைத் தயாரிக்கும் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் முதல் முறையாக செடான் பிரிவில் பேட்டரியில் இயங்கும் காரை இ.கியூ.எஸ். என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இதன் விற்பனையக விலை சுமார் ரூ.2.45 கோடி. எஸ்.யு.வி. மாடலைத் தொடர்ந்து தற்போது செடான் பிரிவில் இந்தக் காரை மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது இறக்குமதி செய்யப்பட்டு இங்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
இதில் 107.8 கிலோவாட் திறன் கொண்ட பேட்டரி உள்ளது. விரைவான, ஸ்திரமான செயல்பாட்டுக்கென இரண்டு மின் மோட்டார்கள் உள்ளன. இவை முன்புற அச்சு மற்றும் பின்புற அச்சுகளில் நிறுவப்பட்டுள்ளன. நான்கு சக்கர சுழற்சி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கார் 658 பி.ஹெச்.பி. திறனையும், 950 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இதனால் இதை ஸ்டார்ட் செய்து 3.4 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கி.மீ ஆகும். ஐந்து விதமான ஓட்டும் நிலைகளை (ஸ்லிப்பரி, கம்பர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ் மற்றும் இன்டிவியூஜூவல்) கொண்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 570 கி.மீ. தூரம் ஓடக் கூடியது.
இது விரைவாக சார்ஜ் ஆக 200 கிலோவாட் சார்ஜர் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 19 நிமிடம் சார்ஜ் செய்தாலே 300 கி.மீ. தூரம் வரை பயணிக்க முடியும். மேலும் பிரேக் பிடிக்கும்போது அதிலிருந்து மின்சாரம் உற்பத்தியாகி நீண்ட தூரம் கார் ஓடுவதற்கு வழிவகுக்கிறது. காரின் நிறத்திற்கேற்ற முன்புற பம்பர், டிஜிட்டல் முகப்பு விளக்கு, 22 அங்குல அலாய் சக்கரம், பின்புறமும் காரின் நிறத்திற்கேற்ற ஏப்ரான் இதற்கு அழகிய தோற்றப் பொலிவை அளிக்கிறது.
காரினுள் பிரத்யேக பல அம்சங்கள் உள்ளன. மிருதுவான தோலினால் ஆன உறைகள், சொகுசான பயணத்தை உறுதி செய்வதற்கேற்ப மைக்ரோ பைபர் பஞ்சினால் ஆன இருக்கைகள் உள்ளன. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பிரீமியம் சொகுசு காராக வந்துள்ளது.