கின்னஸ் புத்தகம்

அரசாங்கத்திற்காக புள்ளி விவரங்களை சேகரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட்டர், ரோஸ் மைக் வைக்ட்டர் என்ற இரட்டை சகோதரர்கள் மற்றும் சர்க்யூ பீவர் ஆகிய 3 பேரின் உழைப்பில் பிறந்ததுதான் கின்னஸ் புத்தகம்.

Update: 2022-06-28 16:26 GMT

கடந்த 1951-ம் ஆண்டு அயர்லாந்து நாட்டை சேர்ந்த 'கின்னஸ் வாட் சாலை' என்ற அமைப்பின் நிர்வாக இயக்குனராக இருந்த சர்க்யூ பீவர் என்பவர் வேட்டையாடுவதற்காக ஆற்றங்கரையோரம் நடந்து சென்றார். அப்போது வானில் 'கோல்டன் பிளவர்' பறவை கூட்டம் ஒன்று சென்றது. உடனே தனது துப்பாக்கியை எடுத்து, அந்த கூட்டத்தை நோக்கி சுட முயன்றார். ஆனால் அதற்குள் பறைவை கூட்டம், கண்ணுக்கே தெரியாத தொலைவுக்கு சென்றுவிட்டது. இது அவருக்கு வியப்பை ஏற்படுத்தியது. மேலும் ஒரு சிந்தனை பளிச்சிட்டது. உலகிலேயே மிகவும் வேகமாக பறக்கும் பறவையினம், அதுவாகத்தான் இருக்குமோ? என்று எண்ணினார். அதுதொடர்பாக பல புத்தகங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. இதனால் அது தொடர்பாக நாமே ஒரு புத்தகம் வெளியிட்டால் என்ன? என்று யோசித்தார். உடனே லண்டன் சென்று, அங்கு அரசாங்கத்திற்காக புள்ளி விவரங்களை சேகரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட்டர், ரோஸ் மைக் வைக்ட்டர் என்ற இரட்டை சகோதரர்களை சந்தித்தார். மேலும் அவர்களிடம் தனது புதிய புத்தக யோசனையை தெரிவித்தார். அவர்களும் ஒத்துழைப்பு தர முன்வந்தனர். அந்த 3 பேரின் உழைப்பில் பிறந்ததுதான் கின்னஸ் புத்தகம். முதல் கின்னஸ் புத்தகம் 1955-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி 198 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. அதில் உலகிலேயே மிகவும் பெரியது, மிகவும் சிறியது போன்ற விவரங்கள் அடங்கி இருந்தன. மேலும் அந்த ஆண்டு வெளியான புத்தகங்களில் அமோகமாக விற்பனையான புத்தகம் என்ற பெருமையையும் பெற்றது.

அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது சாதனை புரிந்தவர்களை பற்றிய செய்திகளோடு புத்தகம் வெளிவந்தது. ஆண்டுதோறும் வெளிவரும் கின்னஸ் புத்தகம், 1957 மற்றும் 1959 ஆகிய 2 ஆண்டுகளில் மட்டும் வெளிவரவில்லை. ஆனால் அதற்கான காரணமும் வெளியிடப்படவில்லை.

கின்னஸ் புத்தகம் பற்றிக்கூட கின்னஸ் புத்தகத்தில் 1974-ம் ஆண்டு தகவல் இருந்தது. அதாவது உலகிலேயே அதிகமாக விற்பனையான புத்தகம் என்ற வரிசையில் இடம் பிடித்தது. முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த புத்தகம் விரைவிலேயே 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்பட்டது.

தனிப்பட்ட நபர் தனது எந்தவொரு புதிய சாதனையையும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற அனுப்பலாம். சாதனை பற்றிய பத்திரிகை செய்திகள், பார்வையாளர்களாக இருந்த பொறுப்பானவர்களின் கையெழுத்து தொகுப்பு, இவை உண்மைதான் என்று ஒரு பொறுப்பான நிறுவனத்தின் தலைவர் வழங்கும் உறுதிமொழி ஆகியவற்றை அனுப்ப வேண்டும். புதிய சாதனை முந்தைய சாதனையை முறியடிப்பதற்காக இருந்தால் அந்த செய்தியும், சாதனையாளர் பற்றிய தகவலும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும்.

Tags:    

மேலும் செய்திகள்