பெங்களூருவில் இயங்கும் வித்தியாசமான தபால் நிலையம்...!

பெங்களூருவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த எம்.ஜி. ரோட்டில் மியூசியம் சாலையில்தான், இந்த மாலை நேர தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது.

Update: 2023-01-29 13:54 GMT

சார்... போஸ்ட்.... என்ற வார்த்தையை கேட்டதும் வீட்டில் இருப்பவர்கள் ஓடோடி வந்து தபாலில் என்ன வந்துள்ளது என ஆவலுடன் பார்ப்பார்கள். அந்த அளவுக்கு தபால் சேவைகள் மக்களுடன் பின்னிப் பிணைந்து இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது மாறிவிட்டது.

இருப்பினும் உலகில் மிகப்பெரிய துறை இந்திய தபால் துறை. நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 54 ஆயிரம் தபால் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்தியாவில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனி முதன் முதலாக 1764-1766-களில் மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா மாகாணங்களில் தபால் சேவையை தொடங்கியது. வாரன் காஸ்டிங் கவர்னராக இருந்தபோது தபால் சேவை பொதுமக்களுக்காக செயல்படத் தொடங்கியது. இந்தியாவில் கடந்த 1854-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி "இந்தியா போஸ்ட்" என்ற பெயரில் தபால் துறை செயல்பட்டு வருகிறது.

நீண்ட... நெடுநாளைய வரலாற்று பின்னணியை தாங்கி நிற்கும் தபால் துறையில் கடித போக்குவரத்து தான் பிரதானமாக இருந்தது. அதன் பிறகு கால சக்கர சுழற்சியால் மணியார்டர், தந்தி, ஸ்பீடு போஸ்ட் என பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வருகிறது.

செல்போன் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியாலும், தனியார் பார்சல் நிறுவன சேவையாலும் சிறிது ஆட்டம் கண்டாலும் மக்களை கவரும் வகையில் கடன் வழங்குதல், மகளிருக்கான சிறுசேமிப்பு திட்டங்கள், தபால் அட்டை வசதி என பல பரிமாணங்களுடன் இன்றளவும் தபால் துறை தன்னிகரற்ற சேவையை வழங்கி வருகிறது என்றால் மிகையல்ல...!

இதற்கு மணிமகுடம் சூடும் வகையில் கர்நாடகத்தில் தபால் துறை புதிய மைல்கல்லை நோக்கி பயணப்படுகிறது. ஆம்...! பொதுவாக தபால் துறை அலுவலகம் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனால் தபால் அனுப்புதல், ஸ்பீடு போஸ்ட் மற்றும் கடிதங்களை அனுப்புதல் அந்த நேரத்திற்குள் மட்டுமே செய்யப்படுகிறது.

இதனால் பிற்பகல் முதல் மாலை வரை தபால் சேவை கிடைக்காமல் பலரும் சிரமப்பட்டு வந்தனர். அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் மாலை நேர தபால் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது.

பெங்களூருவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த எம்.ஜி. ரோட்டில் மியூசியம் சாலையில்தான், இந்த மாலை நேர தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே பெங்களூருவின் அடையாளங்களான தாஜ் வெஸ்ட் ஓட்டல், தலைமை தபால் அலுவலகம் உள்ளது. கடந்த 16-ந்தேதி முதல் இந்த தபால் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இங்கு 2 ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து 6 நாட்களும், மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை சேவை வழங்கி வருகிறது.

கர்நாடகத்தில் இந்த மாலை நேர தபால் நிலையம் முதன்முறையாக தார்வாரில் தொடங்கப்பட்டது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து தற்போது பெங்களூருவில் இந்த தபால் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. இதனை கர்நாடக தலைமை தபால் அதிகாரி எஸ்.ராஜேந்திரகுமார் திறந்துவைத்தார்.

வழக்கமாக செயல்படும் தபால் நிலையத்தில் கிடைக்கும் அனைத்து சேவைகளும் இந்த மாலை நேர தபால் நிலையத்திலும் மக்களுக்கு கிடைக்கும். அதாவது ஸ்பீடு போஸ்ட், மணியார்டர் சேவை, பார்சல் புக்கிங், பார்சல் பேக்கிங், ஆதார் சேவை, புகைப்பட தபால் அட்டை, தபால் வில்லைகள் உள்பட பல்வேறு சேவைகளை இங்கே பெற்றுக்கொள்ளலாம். பொதுவாக பிற்பகல் 3.30 மணிக்கு மேல் பொது தபால் நிலையத்தில் மட்டுமே ஸ்பீடு போஸ்ட் அனுப்ப முடியும். ஆனால் இந்த சேவை மாலை நேர தபால் நிலையத்திலும் வழங்கப்படுகிறது.

அதுபோல் பதிவு தபால்களை அனுப்ப ரெயில் நிலையத்தின் ஆர்.எம்.எஸ்.க்கு செல்ல தேவையில்லை. இந்த தபால் நிலையம் மூலமாக அனுப்பவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தபால் அதிகாரி எஸ்.ராஜேந்திரகுமார் கூறுகையில், ''கர்நாடகத்தில் மாலை நேர தபால் நிலையம் தார்வாரில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கினோம். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து 2-வது அலுவலகத்தை மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் தற்போது தொடங்கியுள்ளோம். இது தனி அலகு போல் செயல்படாது'' என்றார்.

இதுபற்றி வணிக மேம்பாட்டு தபால் மாஸ்டர் ஜெனரல் வி.தாரா கூறுகையில், ''இந்த தபால் நிலையம் மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாலை நேர தபால் நிலையத்தை திறந்துள்ளோம். பெங்களூரு மக்களிடம் இந்த தபால் நிலையத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மாநகரில் பல இடங்களிலும் மாலை நேர தபால் நிலையங்களை திறக்க முடிவு செய்துள்ளோம்'' என்றார்.

தற்போது இந்த மாலை நேர தபால் நிலையத்திற்கு தினமும் 200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து தபால் சேவையை பெற்று செல்வதாக அங்கு பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார். இங்கு பணியாற்றும் ஊழியர்கள் இந்திய போஸ்ட் சின்னத்துடன் கூடிய சீலிவ்லெஸ் `கோட்'அணிந்து வேலை பார்த்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்