விவசாயிகளுக்கு வழிகாட்டி, வறட்சி பூமியை வளப்படுத்தும் தம்பதி

கர்நாடகாவைச் சேர்ந்த ராஜன் பழனியப்பன் - வள்ளியம்மாள் கிருஷ்ணசாமி தம்பதியர் அனிஷா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். அதன் மூலம் விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சி அளிக்கிறார்கள்.

Update: 2022-08-30 13:47 GMT

இவர்களின் முயற்சியால் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட்டிருக்கிறது. வறட்சியான கால நிலை நிலவும் பகுதியில் விவசாயம் செய்து நஷ்டத்தை சந்தித்து வந்தவர்கள் இப்போது இயற்கை விவசாயத்திற்கு மாறி லாபம் ஈட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ராஜன் பழனியப்பன், வள்ளியம்மாள் கிருஷ்ணசாமி இருவரும் 1994-ம் ஆண்டு பெங்களூருவில் சட்டம் சார்ந்த எல்.எல்.பி படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது தங்கள் நண்பர் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து தொண்டு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள். பெங்களூருவில் தெருவோரம் வசிக்கும் குழந்தை களுக்கு கல்வி போதிப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டிருக்கிறார்கள்.

''தெருவோரம் வசிக்கும் குழந்தைகளில் பெரும்பாலானோர் கிராமப் புறங்களில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள். அங்கு விவசாயம் உள்பட தொழில் வாய்ப்புகள் குறைந்து கொண்டிருப்பதால் பலரும் நகரங் களுக்கு குடியேறுகிறார்கள் என்பதை அந்த குழந்தைகளுடன் பழகியபோது தெரிந்து கொண்டேன்'' என்கிறார், வள்ளியம்மாள்.

2004-ம் ஆண்டு சாம்ராஜ்நகர் மாவட்டத்திலுள்ள தனது கணவரின் சொந்த ஊரான நல்லூருக்கு வள்ளியம்மாள் சென்றிருக்கிறார். அங்கு பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்து வருவதையும், பலர் விவசாயத்தை கைவிட்டு வேறு ஊர் களுக்கு இடம் பெயர்ந்ததையும் கவனித்திருக்கிறார்.

''சாம்ராஜ்நகர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான கிராமங்கள் விவசாயத்தை நம்பியுள்ளன. ஆனால் விளைச்சல் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இருப்பதில்லை. பருவ மழையை நம்பித்தான் பெரும்பாலான விவசாயிகள் பயிர் செய்கிறார்கள். பருவமழையும் சாதகமாக இருப்பதில்லை. அதனால் பல விவசாய நிலங்கள் கைவிடப்பட்டு வறட்சியின் பிடியில் சிக்கி இருப்பதை பார்த்தேன்'' என்கிறார், வள்ளியம்மாள்.

விவசாயிகள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்வதை தடுக்கவும், விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளுடன் கலந்துரையாடி இருக்கிறார்கள். இறுதியில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் கிராமப்புற விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த முடியும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

சாம்ராஜ் நகர் மாவட்டத்திலுள்ள கொள்ளேகால் தாலுகா வில் உள்ள மார்டஹள்ளி பகுதிக்கு தங்கள் தொண்டு நிறுவனத்தை இடம் மாற்றி இருக்கிறார்கள். அந்த பகுதியை சேர்ந்த விவசாயி களுக்கு இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி அளிக்க தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததுடன், விளைச்சலும் அதிகரித்திருக்கிறது.

இதுவரை இரண்டு ஆயிரம் விவசாயி களுக்கு இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி அளித்திருக்கிறார்கள். அத்துடன் மார்டஹள்ளியை சுற்றியுள்ள 20 கிராமங்களில் 400-க்கும் மேற்பட்ட வீடுகளில் தோட்டம் அமைப் பதற்கு உதவி இருக்கிறார்கள். இப்போது பள்ளி மாணவர்களும் ஆர்வமாக இயற்கை விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள்.

''ஆரம்பத்தில் இயற்கை விவசாயத்திற்கு மாறுவதற்கு விவசாயிகள் தயக்கம் காட்டினார்கள். அவர்கள் மத்தியில் நிலவும் அச்ச உணர்வை போக்கி சமாதானப்படுத்துவது எளிதான காரியமல்ல. அதை நாங்கள் சவாலாக எடுத்துக்கொண்டோம். இயற்கை விவசாயத்திற்கு நிலத்தை தயார் செய்யவும், சாகுபடி செய்வதற்கு இயற்கை விவசாய வழிமுறைகளை பின்பற்றவும் நாங்கள் உதவினோம்.

நாங்களும் ஒன்றாக சேர்ந்து கள பணியில் ஈடுபட்டதால் அவர்களிடத்தில் நம்பிக்கை அதிகரித்தது. ரசாயன முறை விவசாயத்தை விட இயற்கை விவசாயம் சிறப்பானது, ஆரம்பத்தில் அதிகம் செலவு செய்வது போல் தோன்றினாலும் செலவு குறைவானதுதான் என்பதை நிரூபித்தோம். இயற்கை சாகுபடிக்கு மண்ணை எவ்வாறு தயார் படுத்துவது, கடைகளில் உள்ள கலப்பின விதைகளுக்குப் பதிலாக நாட்டு விதைகளை பயன்படுத்துவது, வீட்டிலேயே இயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகளை எவ்வாறு தயாரிப்பது என்பதையும் விவசாயிகளுக்கு கற்றுக் கொடுத்தோம். இது செலவைக் குறைத்து, விளைபொருட்களின் மதிப்பை அதிகரிக்க உதவியது'' என்கிறார், வள்ளியம்மாள்.

2016-ம் ஆண்டு முதல் பள்ளிகளில் இயற்கை விவசாய தோட்டங்களை அமைப்பதற்கும் ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

''2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை மூன்று பஞ்சாயத்துகளில் உள்ள 23 பள்ளிகளுடன் இணைந்து சுமார் 1,500 மாணவர்களுக்கு பயிற்சி அளித்தோம். கல்வித் துறையின் அனுமதியுடன், இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வகுப்புகளை நடத்தினோம். தோட்டம் அமைப்பதற்கு தேவையான விதை களையும் வழங்கியுள்ளோம்'' என்கிறார் ராஜன்.

Tags:    

மேலும் செய்திகள்