மருத்துவ குணங்கள் நிறைந்த அத்தி மரம்
எப்போதாவது ஒருமுறை நிகழக்கூடியதை அத்தி பூத்தாற்போல் என்று சொல்வது உண்டு. ஆம்...! அத்தி பூப்பதை காண்பது மிகவும் அரிது. பால் முதல் பட்டை வரை பயன்தரக்கூடிய அந்த பூவை கொண்டது அத்தி மரம் ஆகும்.
அதன் இலை, பால், பழம், பிஞ்சு, காய், பட்டை உள்பட அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது. அத்திப்பழத்தை அன்றாட உணவில் ஒரு பகுதியாக சேர்த்துக்கொண்டால் எந்தவித நோயும் நம்மை அண்டாது என்றே கூறலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த அத்தி மரத்தை பற்றி இக்கட்டுரையில் காண்போம்...!
மர வகையை சேர்ந்தது அத்தி ஆகும். இது நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி உள்பட பல்வேறு வகைளை கொண்டது. இந்த மரம் சுமார் 10 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும். அதன் இலைகளில் 3 நரம்புகள் இருக்கும். அத்திப்பழம் நல்ல மணத்துடன் இருந்தாலும் வெட்டி பார்த்தால் உள்ளே சிறிய பூச்சிகள், புழுக்கள் இருப்பதை காணலாம். இதனால் அவற்றை பொதுவாக பதப்படுத்தாமல் உண்ண முடியாது.
சங்க காலத்தில் அத்தி மரத்தை அதவம் என்றே அழைத்ததாக கூறப்டுகிறது. அத்திப்பழத்தில் புரதம், சர்க்கரை, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது. மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் 4 மடங்கு அதிக சத்துக்கள் இருக்கிறது. இது தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகளவில உள்ளது. பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்து கடைகளில விற்கப்படுகின்றன. உலர வைத்து பொடியாக்கிய அத்தி மர இலைகள் பித்தம் மற்றும் பித்தத்தால் வரும் நோய்களை குணமாக்க வல்லவை. காயங்களில் வடியும் ரத்தப்போக்கையும், இதைக்கொண்டு நிறுத்தலாம். இந்த பொடியில் தயாரித்த கலவையை கொண்டு நாள்பட்ட மற்றும் அழுகிய புண்களை கழுவினால் குணமாகிவிடும். இதன் இலைகளை கொதிக்க வைத்த தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண்கள் ஆறும். மேலும் ஈறுகளில் சீழ் வடிவதும் குணமாகும். அத்திப்பழம் மிகச்சிறந்த ரத்த பெருக்கி ஆகும். நன்றாக முதிர்ந்து தானாக பழுத்து கீழே விழுந்த அத்திப்பழத்தை அப்படியே உண்ணலாம். தேனில் ஊறவைத்து பதப்படுத்தியும் உண்ணலாம். உண்ட உணவை விரைவில் ஜீரணிக்க செய்து பித்தத்தை வியர்வையாக வெளியேற்றி உடலுக்கு சுறுசுறுப்பை தரக்கூடியது அத்திபழம் ஆகும். அத்திப்பழத்தை அப்படியே சாப்பிட்டால் வாய் தூர்நாறறம் அகலும், நெல்லிக்காய் சாப்பிடுவது போல அவ்வப்போது அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் வெட்டை நோய் கிட்டையே வராது.
மேலும் அந்த நோய் இருப்பவர்களுக்கு அதன் பாதிப்பை ஆணிவேரோடு அகற்றிவிடும் வல்லமை வாய்ந்தது இந்தப்பழம் ஆகும். காட்டு அத்திப்பழத்தை தினமும் ஒரு வேளை உண்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண்குஷ்டம் உள்ளிட்ட தோலின் அனைத்து நிறமாற்ற பிரச்சினை களுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். வெண்புள்ளிகளை குணமாக்க அத்திப்பழத்தை பொடி செய்து பன்னீரில் கலந்து பூசலாம். மலச்சிக்கல் விலக வழக்கமான உணவுக்கு பிறகு அத்தி விதைகளை சாப்பிடலாம், நாள்பட்ட மலச்சிக்கல் தொந்தரவு தீர்வதற்கு இரவுதோறும் 5 அத்திப்பழங்களை உண்டு வர நல்ல குணம் தெரியும். அத்திப்பழங்களை வினிகரில் ஒரு வாரம் வரை ஊறவைத்து தினமும் 2 பழங்களை சாப்பிட்டு வருவது போதைப்பழக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்துக்கு சிறந்த மருந்தாக இருக்கும். வழக்கமான அத்தி மரங்களில் கீறல் தழும்புகளை பார்க்கலாம். இவை அத்தனையும் அத்திப்பாலுக்காக கீறப்படுபவை. சர்க்கரை நோயால் ஏற்பட்ட பிளவு, கீழ்வாதம், மூட்டு வீக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு அத்திப்பால் கொண்டு பத்து போட்டால் விரைவில் குணமாகிவிடும். வாத நோய்களுக்கு அத்திப்பாலை வெளிப்பூச்சாக தடவலாம்.
இதன் காரணமாகவே அத்தி மரத்தில் கீறல்கள் போட்டு, பால் எடுக்கப்படுகிறது. இதுபோன்று எண்ணற்ற மருத்துவ பயன்களை சொல்லிக்கொண்டே போகலாம். அத்தனை சிறப்புகளை கொண்டது அத்திமரம் ஆகும். ஆனால் சமீப காலமாக அத்தி மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதை அதிகரிக்க வேண்டியதும் அடுத்த தலைமுறை நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள கொடுத்து செல்ல வேண்டியதும் அனைவரின் கடமை ஆகும்.