விவசாய பயிற்சி பட்டறை நடத்தும் என்ஜினீயர்

இயற்கையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை குழந்தைகளிடையே ஏற்படுத்தும் வகையில், உயிர் பன்முகத்தன்மை மற்றும் விவசாய பட்டறையை நடத்த இருக்கிறார், கர்நாடகாவை சேர்ந்த விவசாயி ஸ்ரீவத்சா கோவிந்தராஜு.

Update: 2022-03-27 07:53 GMT
என்ஜினீயராக இருந்து விவசாயியாக மாறிய ஸ்ரீவத்சா, வனத்தை உருவாக்கி இயற்கையை பாதுகாப்பதன் மூலம் பலராலும் அறியப்பட்டவர். இவரது பண்ணையில் 250 வகையான தாவரங்களும், 50-க்கும் மேற்பட்ட வன விலங்குகளும் வாழ்கின்றன. இவர் பயிரிட்டுள்ள தாவரங்களில் மூலிகைகளும் அடங்கும்.

விவசாய நாடான இந்தியாவின் பாரம்பரியத்தை பற்றி குழந்தைகளுக்கு தெரியப்படுத்தவும், மறந்துபோன உணவு மற்றும் மூலிகைகள் பற்றிய விஷயங்களை பகிர்ந்துகொள்ளவும் ஸ்ரீவத்சா முயற்சி மேற்கொண்டுள்ளார். இதையொட்டி வரும் ஏப்ரல் மாதம் 3 நாட்கள் முகாம் நடத்த திட்டமிட்டுள்ளார். இது குறித்து ஸ்ரீவத்சா கூறுகையில், “எனது பண்ணையில் இரண்டு பிரிவுகளாக குழந்தைகளுக்கான பட்டறையை நடத்த உள்ளேன். இதன் மூலம் விவசாயம் குறித்து குழந்தைகள் கற்றுக்கொள்ள முடியும்.

மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட ஒருங்கிணைந்த விவசாயத்தை நடைமுறைப்படுத்தி வருகிறேன். கால்நடை தீவனங்களை நான் வெளியில் வாங்குவதில்லை. என் பண்ணையில் இருந்தோ, விவசாயிகளிடமிருந்தோ பெறுகிறேன்.

இந்த பட்டறையின்போது, இயற்கையான நடைப்பயணம், இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து தயாரித்தல், உரம் மற்றும் விதைப்பந்துகள் தயாரித்தல், மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட விஷயங்களை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க இருக்கிறேன்” என்றார்.

மேலும் செய்திகள்