சாலையின் குறுக்கே அரளி செடிகள்
நெடுஞ்சாலைகளில் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த வாகனங்களில் இருந்து வெளிவரும் புகைகளில் கார்பன் நச்சுகள் அதிகமாக இருக்கும். இந்த நச்சு வாயு, காற்றை அசுத்தமாக்குவதுடன், சாலையில் பயணிப்போருக்கு சுவாச கோளாறுகளையும் ஏற்படுத்தும். அதனால்தான் இந்த நச்சுக்காற்றை கட்டுப்படுத்த செவ்வரளிச் செடிகள் வளர்க்கப்படுகின்றன.
செவ்வரளி செடியில் உள்ள இலைகள் மற்றும் மலர்கள் கார்பன் துகள்களை காற்றிலிருந்து நீக்கி, காற்றிலுள்ள மாசுகளை அகற்றி, தூய காற்றாக மாற்றும் தன்மை கொண்டவை. இதனால் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது தூய்மையான காற்றை சுவாசிக்க முடியும். அதனால்தான் அந்தச் செடிகள் நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் அதிகமான அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. மேலும், இவை வறட்சியையும் தாங்கும் தன்மை கொண்டவை. மண் அரிப்பையும் தாங்கும் தன்மை கொண்டவை. வாகனங்கள் தரும் இரைச்சலையும் குறைத்து, சத்தத்தை குறைக்கும் ஆற்றல் படைத்தவை. எதிர்புறம் உள்ள சாலைகளில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகள் எதிர்வரும் வாகன ஓட்டிகளின் மீது படாமலும் தடுக்கின்றன. அந்த அளவுக்கு இலைகள் அடர்த்தி மிக்கவை. மேலும் இவற்றை பராமரிக்கும் செலவுகளும் குறைவாகத்தான் இருக்கும்.
விலங்குகள் இயற்கையாகவே இந்த தாவரத்தின் இலைகளை உண்ணாது என்பது இயற்கையின் விதி. அதனால் விலங்குகள் பாதிப்பிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். அழகோடு சேர்த்து இத்தனை வசதிகளும் இருப்பதால்தான் நிறைய நெடுஞ்சாலைகளில் இதைக் காண முடிகிறது. நெடுஞ்சாலைகளில் வைக்கப்படும் அரளிச் செடிகள் மழை அதிகமான காலங்களில் செழித்து வளரக்கூடியவை. இதைச் சரிவர பாதுகாத்து வருவதும் அவசியம். ஒரே அளவில் இவை வளர்ந்ததாக இருக்க வேண்டும். அதிகமாக வளர்ந்தால் மக்கள் சாலையை கடக்கும்போது விபத்துகள் நேரலாம். அதனால்தான் சாலையின் நடுவில் செடிகள் குறைந்த அளவு உயரமாக வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.