டாடா டிகோர் சி.என்.ஜி. அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத் தயாரிப்புகளில் டிகோர் மாடல் கார் மிகுந்த வரவேற்பைப் பெற்றதாகும். சுற்றுச் சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சி.என்.ஜி.யில் இயங்கும் மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Update: 2022-01-26 11:53 GMT
இந்நிறுவனத்தின் மற்றொரு மாடலான டியாகோவும் தற்போது சி.என்.ஜி.யில் இயங்கும் வகையில் அறிமுகமாகியுள்ளது. சி.என்.ஜி. பாகங்கள் நிறுவனத்திலேயே பிட்டிங் செய்யப்பட்டுள்ளது. இது அதிகபட்ச பாதுகாப்பை வாடிக்கையாளருக்கு வழங்கும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திலிருந்து முதலில் வெளிவரும் சி.என்.ஜி. மாடல் கார்கள் இவை இரண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சி.என்.ஜி. மாடல் டியாகோ 1.2 லிட்டர், 3 சிலிண்டர் ரெவ்ட்ரான் பெட்ரோல் என்ஜினைக் கொண்டது.

இது 73 ஹெச்.பி. திறனையும், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இவை இரண்டுமே 5 கியர்களைக் கொண்டவையாகும். சோதனை ஓட்டத்தில் இவை ஒரு லிட்டர் சி.என்.ஜி.க்கு 26.49 கி.மீ. தூரம் ஓடி எரிபொருள் சிக்கமானவை என நிரூபித்துள்ளன. இவை இரண்டின் வடிவமைப்பிலும் எவ்வித மாறுதலும் செய்யப் படவில்லை. உள்புறத்திலும் மாறுதல்கள் மேற்கொள்ளப் படவில்லை. டியாகோ மாடலில் எக்ஸ்.இ., எக்ஸ்.எம்., எக்ஸ்.டி. மற்றும் எக்ஸ்.இஸட். பிளஸ் என நான்கு வேரியன்ட்கள் வந்துள்ளன. டிகோர் மாடலில் எக்ஸ்.இஸட். மற்றும் எக்ஸ்.இஸட். பிளஸ் என இரண்டு வேரியன்ட்கள் வந்துள்ளன.

இவை 14 அங்குல சக்கரங்களையும், புரொஜெக்டர் முகப்பு விளக்கையும் கொண்டுள்ளன. அத்துடன் பகலில் ஒளிரும் எல்.இ.டி. விளக்கு இதன் முன்புற தோற்ற அழகை மேலும் மெருகூட்டுகிறது. உள்புறம் 7 அங்குல இன்போடெயின்மென்ட் தொடு திரை உள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளது. இனிய இசையைக் கேட்டு மகிழ 8 ஸ்பீக்கரைக் கொண்ட ஹார்மன் ஆடியோ சிஸ்டம் உள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பேட்டரியில் இயங்கும் ரியர் வியூ மிரர் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங் களாகும். டிகோர் பிரீமியம் மாடலில் மழை உணர் சென்சார் கொண்ட வைபர் உள்ளது. அத்துடன் தானியங்கி முகப்பு விளக்கு மற்றும் இரட்டை வண்ண மேற்கூரை உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டதாயிருக்கும். பாதுகாப்பு அம்சமாக இரட்டை ஏர் பேக், ஏ.பி.எஸ்., ரியர் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

மேலும் செய்திகள்