இயற்கை முறையில் விவசாயம் செய்வோம்

இயற்கை விவசாயம் என்பது தொன்று தொட்ட காலம் முதலே நம்மிடையே இருந்து வந்த ஒன்றாகும். இடைப்பட்ட காலங்களில் இயற்கை முறையில் விவசாயம் செய்வது என்பது நம்மால் மறக்கப்பட்ட நிலையில் இன்று பெரும்பாலானோர் இயற்கை விவசாயம், இயற்கை உணவு என இயற்கையை நோக்கி திரும்பியுள்ளனர்.

Update: 2021-12-23 14:24 GMT
மாறிவரும் இயற்கையும், காலநிலையும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வரும் இந்த நேரத்தில் இயற்கை வேளாண்மையின் அவசியத்தை உரக்கச் சொல்லி வருகிறார்கள் இயற்கை வேளாண்மை ஆய்வாளர்கள்.

பஞ்ச பூதங்களையும் பாதிக்காமல் இயற்கை முறையில் வேளாண்மை செய்யும் பொழுது நாம் நமது அடுத்த தலைமுறைக்கு நஞ்சற்ற வேளாண் முறையை தருவதோடு ஆரோக்கியமான உணவுக்கும் வழிவகை செய்கின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இயற்கை முறையில் விவசாயம் செய்வது எப்படி ?

*அனைத்து விதமான பயிர்களை வளர்ப்பதற்கு ஏற்றவாறு நிலத்தை தயார் செய்வது இயற்கை வேளாண்மையின் முதற்படியாகும். எனவே நிலத்தை நன்கு உழுது மண்ணை பஞ்சுபோல மிருதுவாக மாற்ற வேண்டும்..

*விவசாயிகள் விளைநிலங்களில் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான பயிர் வகைகளை சாகுபடி செய்வதைத் தவிர்த்து, சுழற்சி முறையில் பயிர்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும். உதாரணமாக தக்காளி பயிரிடும் நிலத்தில் ஆண்டு முழுவதும் தக்காளி பயிரிடாமல் அடுத்து எள்,நிலக்கடலை, சோளம் போன்றவற்றை பயிர் செய்துவிட்டு அடுத்து வாழை பயிர் செய்யலாம்.வாழை அறுவடை முடிந்த பின்னர் மறுபடியும் காய்கறிகளை பயிர் செய்யலாம். இவ்வாறு இல்லாமல் ஒரே மாதிரியான பயிரினை தொடர்ந்து பயிர் செய்வதால் நிலமானது தனது வளத்தினை இழக்கிறது. எனவே பயிர் சுழற்சி முறையில் பயிர் செய்வதன் மூலம் நிலம் இழந்த வளத்தினை மீட்டெடுக்கிறது.. பயிர் செய்யும் நிலத்தின் தன்மை.., நீரின் அளவு ஆகியவற்றுக்கு ஏற்ப பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ளலாம்.

*கலப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலமும் இயற்கை வேளாண்மையில் பயிர் மகசூல் அதிகரிக்கின்றது. இவ்வாறு செய்வதினால் களைச் செடிகளின் எண்ணிக்கை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு, பூச்சிகளின் தாக்குதல் வெகுவாக குறைகிறது

*இயற்கை வேளாண்மையில் இயற்கை பூச்சி விரட்டிகளை பயன்படுத்துகிறார்கள். இந்த இயற்கை பூச்சி விரட்டிகள் தீமை செய்யும் பூச்சிகளை அதிக அளவில் கட்டுப்படுத்துகின்றது.. இவ்வாறு இயற்கை பூச்சி விரட்டிகளை பயன்படுத்துவதன் மூலம் விளைவிக்கப்படும் காய்கறிகள்.., பழங்கள் ஆகியவற்றிலும் ரசாயன கலப்பின்றி சுவையான ஆரோக்கியமானவற்றைப் பெறமுடிகின்றது.

*மூடாக்கி போடுதல் இயற்கை வேளாண்மையில் ஒரு முக்கிய அங்கமாக கருதப்படுகின்றது. மூடாக்கு இடுவதன் முக்கிய நோக்கம் விளைச்சலை அதிகப்படுத்துவதாகும்.பயிர்களுக்கு இடையே இலை தழை, வைக்கோல், கரும்புத்தோகை ஆகியவற்றைக் கொண்டு மூடிவிடுவார்கள். இதனால் வேர்ப்பகுதிகளில் ஈரப்பதம் பாதுகாக்கப்பட்டு மண்புழுக்கள் வளர ஏதுவாக இருக்கும்.

* இயற்கை விவசாயத்தில் முற்றிலும் இயற்கை உரங்களே பயன்படுத்தப்படுகின்றன. மண்புழு உரம்., சாண எரு உரம், தொழு உரம், பசுந்தாள் உரம் மற்றும் பசுந்தழை உரம் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இவை மட்டுமல்லாது பயிர்கள் நன்கு செழித்து வளர இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகளான குணப் பசலம், தேங்காய் பால் மோர், அமிர்தக் கரைசல்,பஞ்சகவ்யம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

*தக்கைப்பூண்டு, சணப்பு, கொழுஞ்சி, மணிலா, அகத்தி, நரிப்பயறு முதலியவற்றை பயன்படுத்தியும், மரம், செடி, கொடி ஆகியவற்றின் தழைகளை பயன்படுத்தியும் இயற்கை உரங்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த உரம் தழைச் சத்தாக பயன்படுத்தப்பட்டு நுண்ணுயிர்களை செயல் திறன் பெறச் செய்கிறது.

*பசுந்தாள் உரங்கள் மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பை குறைக்க உதவுகின்றன. அதேபோல் நீர்பிடிப்பு கொள்ளளவை அதிகப்படுத்தும் தன்மையும் பசுந்தாள் உரத்திற்கு உள்ளது.

*பயிர்களின் வளர்ச்சி மற்றும் நல்ல மகசூல் பெற ஊட்டச்சத்தாக இயற்கை முறையில் தயாரிக்கப்படும் கலப்பு உரம் பயன்படுத்தப் படுகிறது. இந்த கலப்பு உரத்திற்கு நாட்டு மாட்டின் சாணம்., ஆட்டுப்புழுக்கை,எரு மற்றும் இலை தழைகள் பயன்படுத்தப்படுகின்றன.

*ஒவ்வொரு தாவரத்திற்கும் உயிர் நாடி என்பது விதையாகும். விதைகளை தேர்ந்தெடுக்கும் பொழுது தரமான நாட்டு விதைகளை தேர்ந்தெடுத்து இயற்கை முறையில் வேளாண் செய்வதன் மூலம் அதிகமான விளைச்சலுடன் தரமான பொருட்களை அனைவருக்கும் வழங்க முடியும்.

*நீர் வளங்களைப் பாதுகாத்து மாசற்ற நீரைத் தக்க வைத்தல், இயற்கைச் சூழல் மாசுபடாமல் காத்தல்,உணவு நஞ்சாவதைத் தடுத்துஉயிரினங்களைப் பாதுகாத்தல், மண்ணின் மலட்டுத் தன்மையை நீக்கி பொன் விளையும் பூமியாக மாற்றுதல், சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும் கேடு ஏற்படாமல் தடுத்து இயற்கை உரங்களின் மூலம் சாகுபடி செய்வதே இயற்கை வேளாண்மை ஆகும்.

மேலும் செய்திகள்