குள்ளமான வழக்கறிஞர்
இந்தியாவின் குள்ளமான வழக்கறிஞர்களுள் தனித்துவமானவராக அறியப்படுகிறார், ஹர்விந்தர் கவுர் ஜனகல். 25 வயதாகும் இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த ஆண்டு வக்கீல் படிப்பை (எல்.எல்.பி) முடித்திருக்கிறார். தற்போது ஜலந்தர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
இவரது உயரம் 3 அடி 11 அங்குலம். அதனால் இந்தியாவிலேயே மிகக் குள்ளமான வழக்கறிஞராகக் கருதப்படுகிறார். ஆனால் அவரை ‘நேர்மறையான வழக்கறிஞர்’ என்றே அழைக்கிறார்கள். அதற்கேற்ப தனித்துவமானவராகவும், அழகானவராகவும் காட்சி அளிக்கிறார்.
விமானப்பணி பெண்ணாக வேண்டும் என்பதுதான் ஹர்விந்தர் கவுரின் சிறு வயது ஆசை. ஆனால் அவரது ஆசை கனவுக்கு உடல் அமைப்பு தடை போட்டுவிட்டது. அவரது தந்தை ஷம்ஷேர் சிங் போக்குவரத்து காவல் துறையில் பணி புரிகிறார். தாயார் சுக்தீப் கவுர் இல்லத்தரசி. ஹர்விந்தருக்கு ஒரு சகோதரர் இருக்கிறார்.
இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் ஹர்விந்தரை தவிர அவரது குடும்பத்தில் உள்ள அனைவருமே உயரமானவர்கள்தான். ஹர்விந்தருக்கு மட்டுமே குறைபாடு இருப்பதால் அவரை பெற்றோர் பல மருத்துவமனை களுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். மருத்துவர்களும் சில சிகிச்சை முறைகளை பரிந்துரைத்திருக்கிறார்கள்.
ஆனாலும் எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை. அதனால் விமானப்பணிப்பெண் ஆசையை ஹர்விந்தர் சிங் கைவிட வேண்டியதாயிற்று. அதனால் மனம் உடைந்து போய்விட்டார். நாளடைவில் ‘உயரம் மட்டும்தானே குறையாக இருக்கிறது. மற்ற திறமைகள் எதுவும் நம்மிடம் இல்லையா?’ என்று தன்னை தானே சுய பரிசோதனைக்கு உட்படுத்தியவர் மன வலிமையை மீட்டெடுத்து, இயல்பு நிலைக்கு திரும்பினார்.
‘‘ஆரம்ப காலகட்டத்தில் நான் எப்போதும் சோர்வாகவே இருப்பேன். சக மாணவர்களும் என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவில்லை. கேலி, கிண்டலுக்கு இலக்கானேன். கடவுள் என்னை ஏன் இப்படி ஆக்கினார் என்று அழுதுகொண்டே இருப்பேன். அக்கம் பக்கத்தினரின் மோசமான விமர்சனங்களும் என்னை மிகவும் பாதித்தது.
அதில் இருந்து மீள்வதற்காக தன்னம்பிக்கையூட்டும் வீடியோக்களை பார்க்க ஆரம்பித்தேன். அவை என் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்க உதவியது. தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டேன். ‘கடவுள் என்னை இப்படி படைத் திருப்பதற்கு காரணம் இருக்கும். அவர் எனக்காக ஏதாவதொரு நோக்கத்தை வைத்திருப்பார். அதை நான் நிறைவேற்ற வேண்டும் என்று நம்பத் தொடங்கினேன்’’ என்கிறார்.
12-ம் வகுப்பு படித்து முடித்த பிறகு, சட்டத்தின் மூலம் தேசத்திற்கு நிறைய நல்ல விஷயங்களை செய்ய முடியும் என்ற எண்ணம் ஹர்விந்தருக்குள் எழ, சட்டப்படிப்பை தேர்ந்தெடுத்தார். அங்கும் பள்ளி கால வாழ்க்கையை போலவே கேலி செய்வதும், ஏளனமாக கேள்வி எழுப்புவதும் தொடர்ந்திருக்கிறது. ``சட்டப்படிப்பு உனக்கு பொருத்தமானது அல்ல என்று கூறி கேலி செய்தார்கள். உன்னால் ஒரு வழக்கை எப்படி எதிர்கொண்டு போராட முடியும்? உன்னால் நீதிபதி முன்பு எப்படி நிற்க முடியும்? என்று என்னை பார்த்து சிரித்தார்கள். ‘நான் ஒரு வெற்றிகரமான வழக்கறிஞராக மாறுவதற்கு என் உயரம் ஒருபோதும் தடையாக இருக்காது. அப்படி நான் நினைக்கவில்லை’ என்று கூறுவேன். ஏனெனில் இந்த துறைக்கு உடல் தோற்றம் முக்கியமானது அல்ல. அறிவும், கல்வியும்தான் முக்கியம் என்பது என் கருத்து. அதில் உறுதியாகவும் இருந்தேன்’’ என்கிறார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சட்டப்படிப்பை முடித்தவர், பஞ்சாப் மற்றும் ஹரியானா பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்து விட்டார். படிப்பின்போது சந்தித்த அவமானங்கள் இப்போது பின் தொடரவில்லை என்பது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது என்கிறார். சட்டத்துறையும், சக வக்கீல்களும் அன்பாக நடந்து கொள்கிறார்கள் என்றும் சொல்கிறார்.
``நான் வக்கீல் பணியில் எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை. கொரோனா காரணமாக, பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. எங்களால் முழுமையாக நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத நிலை இருக்கிறது. நான் நீதிமன்றத்தில் இருக்கும்போது, குற்றவாளிகள், சாட்சிகள் போன்றவர்கள் என்னை விநோதமாக பார்க்கிறார்கள். அவர்களுக்குள் கிசுகிசுக்கவும் செய்கிறார்கள்.
சிலர் என்னை அசவுகரியத்துக்கு ஆளாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் நான் அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு வேலையில் கவனம் செலுத்துகிறேன். வெறுமனே சிரித்துவிட்டு என் வழியில் செல்கிறேன்.
எங்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது. அதை முழுமையாக வாழ வேண்டும். நாம் எவ்வளவு நேர்மறையாக இருக்கிறோமோ, அவ்வளவு நேர்மறையான விஷயங்களும் நடக்கும். 100 பேரில், 99 பேருக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால், என்னைப் பார்த்து மகிழ்ச்சியடையும் அந்த ஒருவரின் அன்பில் நான் மனம் லயித்து போகிறேன்.
எல்லா பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு எல்லா வகையிலும் ஆதரவாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். எனக்கு என் பெற்றோர் பக்கபலமாக இருந்தார்கள். என் கனவை நோக்கிய லட்சிய பயணத்திற்கு ஒருபோதும் தடை போடவில்லை.
தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் தங்களை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு நேசிக்க வேண்டும். குறைகளைத் தாண்டி, உங்களுக்கு முன்னால் இருக்கும் சவால்களை எதிர்கொள்ளும்போது இன்னும் அதிகமாக சாதிக்க முடியும்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார்.
நீதிபதியாக வேண்டும் என்பது ஹர்விந்தர் சிங்கின் லட்சியமாக இருக்கிறது.