நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் தயிர்
தயிர்சாதம் என்றாலே ‘அது ஏழைகளின் உணவு’ என்று இளக்காரமாகப் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். அதிலும் அடைமழைக் காலம், குளிர்காலம், பனிக்காலம் வந்துவிட்டால், ’இந்த கிளைமேட்ல யாராவது தயிர்சாதம் சாப்பிடுவாங்களா? சளி பிடிச்சுக்காதா?‘ என்று தயிர் சாப்பிடுவதை தவிர்ப்பவர்களும் இருக்கிறார்கள்.
பாலில் தயாரிக்கப்படும் உணவில் தயிருக்கு முக்கிய இடமுண்டு. பாலை காய்ச்சி, குளிர வைத்து உறை ஊற்றிச் சில மணி நேரம் காத்திருந்தால், அது தயிராகிவிடுகிறது. பாலை காய்ச்சும்போது அதிலுள்ள கிருமிகள் இறந்து விடுகின்றன. எனவே, தயிரில் தீங்கு செய்யும் கிருமிகள் இருக்க வாய்ப்பில்லை. தயிர் சாப்பிடுவதால் சளி பிடிக்கவும் வாய்ப்பில்லை. தயிர் ஒரு ‘புரோபயாடிக் உணவு’ என்கிறோம். அப்படி என்றால் என்ன? பாக்டீரியாவில் நன்மை செய்யும் பாக்டீரியா, தீமை செய்யும் பாக்டீரியா என இரண்டு வகை உண்டு. இயற்கையாகவே நன்மை செய்யும் பாக்டீரியா உள்ள உணவை புரோபயாட்டிக் உணவு’ என்கிறோம். நம் உடல்நலத்தை மேம்படுத்த உதவுகிற பாக்டீரியா வகைகளும் ஈஸ்ட் வகைகளும் தயிரில் அதிகமுள்ளன. இவை உணவுச் செரிமானத்துக்குப் பெரிதும் உதவுகின்றன.
நம் செரிமான மண்டலத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட நன்மை செய்யும் பாக்டீரியா வகைகள் உள்ளன. இவை உணவை செரிப்பதற்குப் பெரிதும் உதவுவதுடன், உணவுக்கழிவை முறைப்படி வெளியேற்றவும் உதவுகின்றன. இந்த நல்ல பாக்டீரியா பாதிக்கப்படும்போது செரிமான கோளாறுகள் ஏற்படுகின்றன. முக்கியமாக தேவையில்லாமலும் அளவுக்கு அதிகமாகவும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை சாப்பிடும்போது, இந்த நல்ல பாக்டீரியா வகைகள் அழிந்து போகின்றன. எனவேதான், மருத்துவர் பரிந்துரை இல்லாமல் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை சாப்பிட வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறது. தயிர் போன்ற புரோபயாடிக் உணவின் சத்து முழுவதுமாகக் குடலில் உறிஞ்சப்பட வேண்டுமானால், குடலில் நன்மை செய்யும் பாக்டீரியா வகைகள் ஓரளவுக்காவது இருக்க வேண்டும்.
தயிர்ச் சத்து மிகுந்துள்ள ஓர் உணவுப்பொருள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. தயிரை அப்படியே சாப்பிடலாம். அல்லது தயிரில் மிகக் குறைந்த அளவு உப்பு போட்டுச் சாப்பிடலாம். அதிகமில்லாமல் சர்க்கரை போட்டு லஸ்ஸி’யாக செய்தும் சாப்பிடலாம். 100 கிராம் தயிரில் 4 கிராம் கொழுப்பு, 3.2 கிராம் புரதம், 3 கிராம் மாவுச்சத்து, 150 மில்லி கிராம் கால்சியம், 0.2 மி.கி. இரும்புச் சத்து போன்றவை உள்ளன. தயிரில் கொழுப்பும் புரதமும் பாலில் இருக்கும் அளவேதான் இருக்கின்றன. ஆனால், வைட்டமின் ஏ, வைட்டமின் ரிபோபிளேவின் அளவுகள் மட்டும் பாலில் உள்ளதைவிட அதிகமாக உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் மிதமான அளவில் உள்ளன. 100 கிராம் தயிர் 60 கலோரிகள் ஆற்றலை கொடுக்கிறது.
வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிற கெட்ட பாக்டீரியா வகைகளை எதிர்த்து போராடும் ஆற்றல், இந்த நன்மை செய்யும் பாக்டீரியா வகைகளுக்கு உண்டு என்பதால், வயிற்றுப்போக்கு நோயாளிகளுக்கு தயிர் சிறந்த உணவு. இதேபோல் இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் தயிர் சிறந்த உணவு. இரைப்பையில் சுரக்கிற அதீத அமிலத்தை நீர்த்துப் போகச் செய்யும் ஆற்றல் தயிருக்கு உண்டு என்பதுதான் இதற்கு காரணம். தயிரில் போலிக் அமிலம் மிகுதியாக உள்ளதால், கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் ஏற்றது. தயிர், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதாகவும், குடல் புற்று நோயை தடுப்பதாகவும் சமீபத்திய ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.