எழுத்துக்களுக்கு புதுவடிவம் கொடுக்கும் கமலா தேவி
அழகான கலைவடிவங்களில் ‘காலிகிராப்' (caligraphy) எனப்படும் எழுத்து கலையும் ஒன்று. இதுபற்றி, சென்னையை சேர்ந்த கமலா தேவி விளக்கமாக பேசுகிறார். பல கலைகளில் தேர்ச்சி பெற்றிருக்கும் இவர், காலிகிராப் கலையில் பல புதுமைகளை படைத்தவர்.
அவர் இது பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.
‘காலிகிராப்' என்றால் என்ன?
எழுத்திற்கு புதுமையான வடிவம் கொடுக்கும் கலைதான், காலிகிராப். மொழிகளுக்கு அப்பாற்பட்ட கலை. எழுத்துரு (FONT) உருவாக்க வேலைக்கான அடிப்படை இதுவே.
உங்களுக்கு இந்த கலை எப்படி அறிமுகமானது?
சிறுவயதில் இருந்தே, எனக்கு கலை ஆர்வம் அதிகம். சென்னை தமிழ் இசை சங்கத்தில் வீணை வாசிக்க பழகி இருக்கிறேன். ப்ளூட் வாசிப்பேன். கீபோர்ட் இசைப்பேன். கர்நாடக இசையும் பயின்றிருக்கிறேன். இப்படி பல கலைகள் பயிலும் ஆர்வத்தில்தான், ஐ.கியூ.அகடெமி மூலமாக, ‘காலிகிராப்’ கலை பயின்றேன்.
எழுத்து கலை, ஓவியம் இவை இரண்டும் ஒன்றுதானா?
கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆனால் இவை ஒன்றோடு ஒன்று மாறுபட்டவை. இதை சிறப்பான கையெழுத்தின் மேம்பட்ட வடிவம் என்று கூறலாம்.
எழுத்து கலையை யாரெல்லாம் கற்றுக்கொள்ளலாம்?
குழந்தைகளுக்கு தேவையான பயிற்சிகளில், இதுவும் ஒன்று. படைப்பாற்றலை வளர்க்கவும், புது சிந்தனையை தூண்டிவிடவும், இது வழிவகுக்கும்.
இது சம்பாதிக்கக்கூடிய கலையா?
நிச்சயமாக, வெளிநாடுகளில் காலிகிராப்பர்களுக்கு தனி மவுசு இருக்கும். பழங்காலத்து பத்திரங்கள், புத்தகங்கள், பரிசு சான்றிதழ் போன்றவைகளை, தலைசிறந்த காலிகிராப்பர்களே எழுதி உருவாக்கினர். பாரம்பரியத்தை பின்பற்றும் சில உலக நாடுகளில், காலிகிராப்பர்களுக்கு இன்றளவும் நல்ல மரியாதை, நல்ல சம்பளம் கிடைக்கிறது.
சிறப்பான கையெழுத்து பெற என்ன செய்ய வேண்டும்?
முதலில் குழந்தைகளின் விரல்களை வலுவாக்க வேண்டும். பெரும்பாலான பயிற்சி நிறுவனங்களில், நல்ல கையெழுத்திற்காக நிறைய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. உதாரணத்திற்கு களிமண் பிசைதல், சப்பாத்தி மாவு பிசைதல், துணிகளை உலர்த்த கொடிகளில் பயன்படும் ‘கிளிப்'பை திறந்து மூடுதல்... போன்ற பயிற்சிகளால், கை விரல்கள் வலுவாகும். அதேபோல கையெழுத்தும் மாற்றம் பெறும்.
காலிகிராப் கலை பற்றிய புரிதல் இந்தியாவில் இருக்கிறதா?
வெளிநாடுகளை ஒப்பிடுகையில், 10 சதவிகித புரிதல் மட்டுமே இந்தியாவில் இருக்கிறது. அதுவும் ஒருசிலர், இதை ஓவிய கலை வடிவாக பார்ப்பதனால் மட்டுமே, பிரபலமாகி இருக்கிறது.
காலிகிராப் கலையில் நீங்கள் சாதித்தது என்ன?
4 வருடங்களாக காலிகிராப் கலையை பயின்று, முயற்சி செய்து வருகிறேன். வெளிநாடுகளில் நடந்த காலிகிராப் கருத்தரங்குகளில், ஆன்லைன் மூலமாக பங்கேற்றிருக்கிறேன். காலிகிராப் பற்றிய புரிதலை தமிழ்நாட்டில் ஏற்படுத்தும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறேன். நிறைய மாணவர்களுக்கு இலவச பயிற்சிகளை வழங்குகிறேன்.
உங்களுடைய ஆசை, லட்சியம் என்ன?
எனக்கு பிடித்தமான காலிகிராப் மற்றும் இசை துறையில், உயர்படிப்பு படிப்பதே என்னுடைய ஆசை, லட்சியம்.
காலிகிராப் கலையில் ஆர்வம் காட்டும் கமலா தேவி, சென்னை பரங்கிமலையை சேர்ந்தவர். புனித ஹெலன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பயின்றதோடு, ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் வளர்ந்திருக்கிறார். ஆசிரியர் பயிற்சியும் பெற்றிருக்கிறார்.
மூளை திறன் வளர்ப்பு, ஓவிய கலை, இசை துறை ஆகியவற்றிலும் சிறந்து விளங்குகிறார். குழந்தைகளின் கலை அறிவை வளர்ப்பதற்காக, ‘ஸ்ரீ சரஸ்வதி அகடெமி’ என்ற பிரத்யேக பயிற்சி குழுவையும் ஒருங்கிணைப்பதோடு, புதுமையான கலைவடிவங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறார்.