எரிமலை: தூங்கும், வெடிக்கும்..!
எரிமலையை மூன்று வகையாக விஞ்ஞானிகள் பிரித்திருக்கிறார்கள். உயிரற்ற எரிமலை, செயல்படும் எரிமலை, உறங்கும் எரிமலை. இதில் உறங்கும் எரிமலைதான் ரொம்பவும் ஆபத்தானது. அது எப்போது வெடிக்கும், எப்படி வெடிக்கும் என்று யாருக்குமே தெரியாது.
உறங்கும் எரிமலைகள் ஒரு காலத்தில் தொடர்ந்து நெருப்புக் குழம்பைக் கக்கியவைதான். இப்போதுதான் களைத்துத் தூங்கிக்கொண்டிருக்கின்றன. இத்தாலி மற்றும் ஹவாய் தீவுகளுக்குச் சென்றால் உறங்கும் எரிமலைகளை பார்க்கலாம்.
உலகில் சில எரிமலைகள் முன்பு தொடர்ந்து ‘லாவா’ என்னும் எரிமலைக் குழம்பைக் கக்கி வந்திருக்கின்றன. இப்போது அவை நெருப்புக்குழம்பைக் கக்கு வதை நிறுத்திவிட்டன. இனிமேலும் அவை வெடிக்க வாய்ப்பில்லை. எனவே இவற்றுக்கு உயிரற்ற எரிமலைகள் என்று செல்லப்பெயர் சூட்டிவிட்டார்கள். ‘கிளிமஞ்சாரோ’ எரிமலையும் உயிரற்ற எரிமலைதான்.
துடிப்பான வல்கனோ எனப்படும் செயல்படும் எரிமலைகள் ரொம்ப பிரச்சினைக்குரியவை. குறிப்பிட்ட இடைவெளிகளில் லாவா குழம்பைக் கக்கிக்கொண்டே இருக்கும். அந்தமான் தீவில் உள்ள பாரன் எரிமலைகள் இந்த ரகம்தான். எரிமலை வெடிப்பதால் அடிக்கடி பாதிக்கப்படும் நாடு இந்தோனே ஷியா. இந்தோனேஷியாவில் 76 எரிமலைகள் கொதித்துத் ததும்பிக்கொண்டிருக்கின்றன. எரிமலை வெடிக்கும்போது எழும் சாம்பல் எட்டுத் திக்கும் பரவி நிற்கும். சாலைப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து எல்லாம் ஸ்தம்பித்துவிடும்.
எரிமலையிலும் சிகரம் உண்டு. சிலி-அர்ஜெண்டினா எல்லைப் பகுதியில் மத்திய ஆண்டீஸ் மலைத் தொடரில் இருக்கும் ‘ஓஜோஸ் டேல் சலாடோ’ (Ojos del salado) என்ற எரிமலைதான் உலகின் மிக உயர்ந்த செயல்படும் எரிமலை. இதன் உயரம் 22,595 அடி.எப்போதும் பயமுறுத்தும் எரிமலைகளால் சில நன்மைகளும் உண்டு. எரிமலை வெடிப்பதால் வெளிவரும் பல்வேறு பொருட்கள் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களாகப் பயன்படுகின்றன. எரிமலைப் படிவுகள் கட்டுமானப் பொருளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. எல்லாவற்றையும்விட, எரிமலைகள் பூமிக்கு அடியிலிருந்து நல்ல வளத்தைப் புரட்டியெடுத்து வந்து பூமி மீது பரப்புவதால் பயிர்கள் செழிப்பாக வளர்கின்றன.
நெருப்பு குழம்பு எங்கு உருவாகிறது?
எரிமலை வெடிப்பது மிகவும் சுவாரசியமான நிகழ்வு. பூமியின் உட்புறத்தில் வெளிப்புற அடுக்கு (புவி ஓடு), மென் இடை மண்டலம், கருவம்.. என மூன்று அடுக்குகள் உண்டு. மூன்றாவது அடுக்கான கருவம் பகுதியில் 5 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். அங்கு இரும்பும், நிக்கலும் திரவநிலையில் இருக்கும். இந்த நெருப்புக் குழம்பின் தொடர்ச்சியாகவே எரிமலைகள் பூமியின் மேற்பரப்பில் நீண்டிருக்கின்றன. வெப்பத்தில் வெடித்து வெளியேறத் துடிக்கும் நெருப்புக் குழம்பு, பூமியின் பலவீனமான பகுதியைப் பிரித்துகொண்டு வெளியே வந்துவிடுகிறது.