காமராஜர் சொன்னது...

பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர் தனக்கே உரிய பாணியில் பேசியதிலிருந்து.

Update: 2021-05-03 10:05 GMT
“நாட்ல இருக்கிற எல்லாருக்கும் பணம் வேணும். ஏதாச்சும் இயலாமையை சொல்லி அரசாங்கம் பண உதவி பண்ணனும் என்று கேட்கிறாங்க. எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை. பண நோட்டு அடிக்கிற ‘மிஷின்’ எங்கிட்டேதான் இருக்கு. எவ்வளவு வேண்டுமானாலும் அச்சடிக்கலாம். அடிச்சு உங்கள் இஷ்டப்படியே ஆளுக்கு ஒரு மூட்டை பணம் கொடுத்துடுவோம்.

இப்போ பணம் இல்லாதவங்களே நாட்டிலே கிடையாது. கொஞ்ச நாள் கழிச்சு கடைத்தெரு போனீங்கன்னா எல்லா கடையும் பூட்டி கிடக்கும். அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகா, எண்ணெய்ன்னு ஒன்னும் கிடைக்காது. விவசாய வேலைக்கும் ஆள் வராது. வேலைக்கும் ஒருத்தரும் வரமாட்டாங்க. எப்படி வருவாங்க. பணம் வேணும்னா உழைப்பாங்க, கட்டு கட்டா பணம் இருக்கும்போது யார்தான் வேலைக்கு வருவாங்க. பணத்தை தலைமாட்டில் வச்சுக்கிட்டு வயித்துல ஈர துணியை போட்கிட்டு கெடக்க வேண்டியதுதான். ஊரே தூக்கம் வராம கெடக்கும். இப்போ அது மதிப்புள்ள காசு இல்லை, வெத்து பேப்பர்தான்னேன்.

உழைப்புதான் பணம்ன்னேன். பொருளாதாரத்திற்கு ஆதாரமே உழைப்புதான். உழைப்பு இல்லாமல் ஒன்னுமே கெடைக்காது. இப்ப தெரிஞ்சுதா உழைப்பு இல்லாமல் கட்டு கட்டா பணம் கொடுத்தால் நாட்டோட பொருளாதாரமே சீர்கெட்டு கதை கந்தலாகி போகும்”. இது பொருளாதார படிப்பு படிக்காமல் நாட்டு நிலையையும், நாட்டு மக்கள் நாடித்துடிப்பையும் படிச்ச ஒரு எளிய தலைவர் சொன்னது.

மேலும் செய்திகள்