வானவில் : டி.வி.எஸ். பேட்டரி ஸ்கூட்டர் ஐ-கியூப்

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வாகன உருவாக்கத்தில் பிற நிறுவனங்களுக்கு தாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளது தமிழகத்தைச் சேர்ந்த டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம். இந்நிறுவனம் பேட்டரியில் ஓடும் ஸ்கூட்டரை ஐ-கியூப் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

Update: 2020-02-05 10:45 GMT
பேட்டரி வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி உள்ள ஐ.டி. நிறுவனங்கள் அதிகம் உள்ள பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற போக்குவரத்தை மாசில்லா போக்குவரத்தாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் தொழில்நுட்ப இணைப்பு கொண்டது. 

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து அம்சங்களையும் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 4.4 கிலோவாட் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிக திறன் கொண்ட, மின்சார இழப்பு ஏதும் இல்லாமல் செயல்படும் தன்மை கொண்டது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 78 கிலோமீட்டர் ஆகும்.

இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 75 கி.மீ. தூரம் ஓடக்கூடியது. இதை ஸ்டார்ட் செய்து 40 கி.மீ. வேகத்தை 4.2 விநாடிகளில் எட்டிவிட முடிவது கூடுதல் சிறப்பாகும். இதில் டி.வி.எஸ். ஸ்மார்ட் எக்ஸ் இணைப்பு வசதி உள்ளது. மேலும் டி.எப்.டி. கிளஸ்டர் உள்ளது. இதற்கென டி.வி.எஸ். ஐ-கியூப் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் ஜியோபென்சிங், பேட்டரி அளவு, நேவிகேஷன் அசிஸ்ட், கடைசியாக வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடம் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ள முடியும். அத்துடன் உரிமையாளரின் ஸ்மார்ட்போனுக்கு கடைசியாக வந்த அழைப்பு, குறுந்தகவல் உள்ளிட்ட விவரங்களையும் இதில் தெரிந்து கொள்ள முடியும். இதில் கியூபார்க் அசிஸ்ட் வசதியும் உள்ளது. 

இதன் முகப்பு விளக்கு மற்றும் பின்புற விளக்குகள் எல்.இ.டி. பல்புகளைக் கொண்டது. அத்துடன் டி.வி.எஸ். லோகோவை பளிச்சென காட்ட உதவுகிறது எல்.இ.டி. விளக்குகள்.

இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம். இதைப் பெற விரும்பும் டீலர் விவரத்துடன் முன்பதிவுத் தொகை ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக தொடர்பு உதவி வசதியையும் இந்நிறுவனம் அளிக்கும். இது தவிர சுலப தவணையில் வாங்குவதற்கு வசதியாக நிதி உதவி வசதியையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

பேட்டரி ஸ்கூட்டர்களில் தற்போது பஜாஜ் சேடக் மற்றும் ஏதெர் நிறுவனத் தயாரிப்புகளோடு டி.வி.எஸ். ஐ-கியூப் ஸ்கூட்டரும் களமிறங்கியுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1.15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்