அனைவருக்கும் ஏற்புடைய பிரதமரை தேடும் முயற்சியில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ்

மோடி தோல்வியடையும் பட்சத்தில், அனைவருக்கும் ஏற்புடைய பிரதமரை தேடும் முயற்சியில் காய் நகர்த்துகிறார் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ்.

Update: 2019-05-10 06:43 GMT


2019 தேர்தலை போல் இந்தியாவில் இதுவரை எந்த தேர்தலும் இருந்ததில்லை. பொதுமக்கள், ஊடகம், அரசியல் பார்வையாளர்கள், அரசியல் தலைவர்கள் என்று அனைத்து தரப்பினரும் தேர்தல் முடிவுகளை கணிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். தேர்தலில் கடைசி கட்ட வாக்குப்பதிவு, மே 19 அன்று முடிவுக்கு வர இருக்கும் நிலையில், பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத அரசு அமையும் என்ற யூகங்களுக்கு, டி.ஆர்.எஸ். கட்சி தலைவரின் நடவடிக்கைகள் வலு சேர்க்கிறது. கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த கே.சி.ஆர்., பின்னர் தி.மு.க. தலைவர் ஸ்டாலினையும், கர்நாடக முதல்வர் குமாரசாமியையும் சந்திக்க முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் மோடி மீண்டும் வெற்றி பெறுவதற்கும் சாத்தியம் உள்ளதால், பரபரப்பு அதிகரித்துள்ளது.

வேகமாக மாறி வரும் அரசியல் சூழலின் மத்தியில், பிரதமராகும் நம்பிக்கையுடன், காய் நகர்த்தி வருகிறார் தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர். தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவரான கல்வகுந்தல சந்திரசேகர் ராவ் எனப்படும் கே.சி.ஆர்., தெலுங்கானாவின் முன்னேற்றத்திற்காக உறுதியுடன் போராடி வரும் வேளையில், நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார்.

ஒரு மெகா கூட்டணி அமையும் பட்சத்தில், பிரதமராக தன்னையே முன்மொழிய வேண்டும் என்பதை கே.சி.ஆர். தெளிவுபடுத்தியிருக்கிறார். மம்தா பானர்ஜியை சந்தித்த பின், மே 6-ந்தேதி பினராயி விஜயனை சந்தித்தார். மூன்றாம் அணியை கட்டமைக்கும் நோக்கத்துடன், அவர் ஸ்டாலின் மற்றும் குமாரசாமியை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

கேரள முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவே கே.சி.ஆர். கூறியிருந்தார். ஆனால் கேரள முதல்வர், இது மாற்று அரசியல் சாத்தியங்களை முன்னெடுக்கும் முக்கியமான சந்திப்பு என்று தெளிவுபடுத்தினார். பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் அணிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத அரசை அமைக்க கே.சி.ஆர். விருப்பம் தெரிவித்தாக கூறினார். பிரதமராக யாரை முன்மொழிவது என்பது பற்றி விவாதிக்கவில்லை என்றும் கூறினார்.



சென்ற ஆண்டு, கே.சி.ஆர். ஒரு மாற்று அணியை முன்மொழிந்து, அதற்காக பல மாநில தலைவர்களை சந்தித்தார். மம்தா பானர்ஜி, தேவ கவுடா, குமாரசாமி, ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் ஆகிய தலைவர்களை சந்தித்தார். பிறகு தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டே, தேசிய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களையும் கவனித்து வந்தார்.

இப்போது, மெகா கூட்டணி தலைவர்களுக்கு சவாலான காலகட்டம். மோடி, அமித் ஷா தலைமையிலான பா.ஜ.க. வெற்றி பெற, கடுமையாக முயற்சி செய்து வருகின்றது. மறுபுறம் காங்கிரஸ் கட்சியும் கடுமையாக போராடுகிறது.

தேர்தலுக்கு மத்தியில், ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்த கே.சி.ஆர். ஒரு பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாத கூட்டணி அரசு அமைக்கக் குரல் கொடுத்தார். கே.சி.ஆர்., நவீன் பட்நாயக் மற்றும் இதர தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

ஆந்திராவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியை, ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தோற்கடிக்கும் என்று கருதப்படுகிறது. கே.சி.ஆருக்கும் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் இடையே நல்லுறவு உள்ளது. அவர்கள் குடும்ப நண்பர்களும் கூட. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு வெற்றி பெறுவதை தடுக்க கே.சி.ஆர். அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார். அதன் மூலம் பிரதமர் வேட்பாளராக சந்திரபாபு நாயுடு வருவதையும் தடுக்க முயல்கிறார்.

உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. தோல்வி அடைந்தால், சமாஜ்வாடி கட்சியின் முலாயம் சிங் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதியும், பிரதமர் பதவிக்கு போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இவர்களை கே.சி.ஆர். எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

தெலுங்கானா மற்றும் ஆந்திர எம்.பி.க்களின் ஆதரவை மட்டும் வைத்து, பிரதமர் பதவிக்கு கே.சி.ஆர். குறிவைக்கவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மொத்தம் 153 இடங்களில் போட்டியிடும், இதர மாநில கட்சிகளான, மேற்கு வங்கத்தின் டி.எம்.சி, தமிழகத்தின் தி.மு.க., கேரளாவின் இடது முன்னணி, கர்நாடகாவின் மதசார்பற்ற ஜனதா தளம், ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கானாவின் டி.ஆர்.எஸ் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக திட்டமிட்டுள்ளார். 2014 தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், இந்த கட்சிகள் அனைத்தும் மொத்தமாக 100 அல்லது அதற்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெறும் என்று கருதப்படுகிறது. இத்துடன் பரூக் அப்துல்லா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற தலைவர்களின் ஆதரவும் இவருக்கு கிடைக்கும்.

பா.ஜ.க. 180 அல்லது அதற்கும் குறைவான இடங்களில் வென்றால், பிறகு அதனால் ஆட்சியமைக்க முடியாத சூழல் ஏற்படும். அப்போது, கே.சி.ஆர். அனைத்து வகை கூட்டணி முயற்சிகளையும் மேற்கொண்டு, மாநில கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சிப்பார். தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி தான் இவருக்கு பிரதான எதிரி.

இந்த திட்டத்தை செயல்படுத்த கடந்த பல மாதங்களாக உழைக்கிறார். சென்ற டிசம்பர் மாதம், தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற பின், டிசம்பர் 23-ந்தேதி நவீன் பட்நாயக்கை சந்தித்தார் கே.சி.ஆர். பின்னர் 25-ந்தேதி, கொல்கத்தா சென்று மம்தா பானர்ஜியை, அவரது தலைமை செயலக அலுவலகத்தில், ஒரு மணி நேரம் சந்தித்துப் பேசினார்.

உத்தரபிரதேசத்தில் ஒரு போர் குணம் மிக்க, இந்துத்துவ சார்புடைய முதல்வரை கொண்ட பா.ஜ.க., முழு வீச்சில் களமிறங்கியுள்ளது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடும் நிலையில், அங்கு பா.ஜ.க.வின் பலத்தை குறைத்து மதிப்பிட முடியாது. அங்கு காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை பலப்படுத்த பிரியங்கா காந்தி களமிறங்கியிருக்கிறார். இதனால் எஸ்.பி.பி.எஸ்.பி கூட்டணி, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, ஒரு பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்துவது கடினமாக இருக்கும். முலாயம் சிங் அல்லது மாயாவதியை பிரதமராக்க காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்க மறுக்கலாம்.

இதனால், இந்தி பேசாத பிற மாநிலங்களில் இருந்து ஒரு பிரதமரை முன்மொழியும் கே.சி.ஆரின் கோரிக்கை, அவருக்கு ஒரு துருப்புச் சீட்டாக பயன்படும் என்று கருதப்படுகிறது.

கே.சி.ஆர். ஆட்சியமைக்க, ஐ.தே.கூ அல்லது தே.ஜ.கூ ஆகிய இரண்டு அணிகளில் ஒன்றின், ஆதரவு, வெளியில் இருந்து கிடைக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தேர்தல் முடிவுகளை பொறுத்தே இது இருக்கும்.

சுதந்திர இந்தியாவில், பிரதமர்களாக இருந்த 14 தலைவர்களில், தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இருவர் மட்டுமே. 1991-96-ல் பி.வி.நரசிம்ம ராவ் ஐந்து வருடம் முழுமையாக, பிரதமராக இருந்தார். 1996-97-ல், தேவ கவுடா, 11 மாதங்களுக்கு மட்டும் பிரதமராக இருந்தார்.

இதர தென் இந்திய தலைவர்களான ஸ்டாலின், பினராயி விஜயன், ஜெகன்மோகன் ரெட்டி, குமாரசாமி ஆகியோர் தங்கள் மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு, அங்கு தம்மை பலப்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். இதை விட்டு விலகி, தேசிய அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டுவதில்லை. இந்த பின்னணியில் தான் கே.சி.ஆரின் நடவடிக்கைகளைப் பார்க்க வேண்டும். கே.சி.ஆருக்கு போட்டியாக தென் இந்தியாவில் இருந்து தேவ கவுடா களம் இறங்க வாய்ப்புள்ளது. ஆனால் அவருக்கு வயதாகிவிட்டது. மேலும் அவரின் சொந்த மாநிலமான கர்நாடகாவில் அவருக்கு ஆதரவு எந்த அளவுக்கு கிடைக்கும் என்பதும் சந்தேகமாக உள்ளது.

மம்தா பானர்ஜியை பொருத்தவரை, மேற்கு வங்கத்தில் அவரது வாக்கு வங்கியை பாதுகாப்பதில் முழு முனைப்பாக உள்ளார். இதில் கொஞ்சம் தவறினாலும், அங்கு பா.ஜ.க. வளர்ந்து விடும் அபாயம் உள்ளது. மேலும் அங்கு இடதுசாரிகள் மீண்டெழுந்து வரலாம் என்ற கவலையும் அவருக்கு உள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வை எதிர்த்து போரிடும் மம்தா, மூன்றாவது அணிக்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளது. பிரதமராவதை விட, பிரதமரை தேர்வு செய்யும் அதிகாரம் கொண்டவராக உருமாறவே அவர் விரும்புவார்.

சமீபத்தில் நடந்த தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதன் மூலம், அரசியல் ரீதியாக கே.சி.ஆர். வலுவடைந்துள்ளார். டெல்லி அரசியலுக்கு அவர் நகரும் பட்சத்தில், தெலுங்கான முதல்வராக பொறுப்பேற்க, அவரின் மகன் கே.டி.ஆர். ராவ் தயார் செய்யப்பட்டுள்ளார்.

கே.சி.ஆர். ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர். தேசிய அரசியலில் பெரிய பங்காற்ற அவருக்கு, ஜாதகப்படி யோகமுள்ளதாக அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் அவர் அளித்த தொலைகாட்சி பேட்டியில், ஒரு பக்குவப்பட்ட தேசிய தலைவர் போல் கே.சி.ஆர். பதிலளித்துள்ளார். அனைத்துக் கேள்விகளுக்கும், அமைதியாகவும், நிதானமாகவும், தர்க்க ரீதியாகவும் பதிலளித்து, அவரது தொலைநோக்குப் பார்வை மற்றும் தலைமை பண்புகளை வெளிப்படுத்தினார். மே 23-க்கு பிறகு, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கூட்டணிகள், ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டால், காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத அரசு அமைக்கும் திட்டத்தை முன்மொழிந்தார்.

கே.சி.ஆர். பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தவில்லை என்றாலும், அது அந்த பேட்டியில் வெளிப்படையாக தெரிந்தது. ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, தெளிவான இந்தியில் பதிலளித்து, அடுத்த பிரதமராக பொறுப்பேற்க தயார் என்பதை உணர்த்தினார்.

மேலும் செய்திகள்