ஆபாச வலையில் மாட்டித்தவிக்கும் ‘இணைய தலைமுறை’
‘அடல்ட் கண்டன்ட்’, ‘18+ தகவல்கள்’, ‘போர்னோகிராபி’... போன்ற வார்த்தைகள் எல்லாம் இன்றைய தலைமுறையினருக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது.
இளைய தலைமுறை `இணையதலைமுறை' என்பதால், அவர்களது கைகளில் இருக்கும் ஸ்மார்ட் போன்களில் ஆபாச படங்களும், அந்தரங்க கட்டுரைகளும் தாராளமாக காணக்கிடைக்கின்றன. அதுமட்டுமா..?, பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும், கவர்ச்சி மீம்ஸ்களின் ஆதிக்கமே அதிகரித்திருக்கிறது. இது நவீன யுகத்தின் தலைவிதி என்றால், இக்காலத்து சினிமாவும், கவர்ச்சி டிரெண்டிங்கில் வைரலாகி வருகிறது.
இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச செய்கைகள், அரை நிர்வாண காட்சிகள், இளைஞர்கள்-இளம்பெண்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்படும் கவர்ச்சி திரைப்படங்கள் என... இந்திய சினிமாவிலும் ஆபாசம் அதிரடியாக நுழைந்திருக்கிறது. பிரபல நடிகர்களும், இத்தகைய திரைப்படங்களில் நடித்து டிரெண்டிங் ஆவதுதான், இந்திய சினிமாவின் தலையெழுத்தாகிவிட்டது.
ஒரு காலத்தில் இலை மறைகாயாக மட்டுமே நடமாடி வந்த ஆபாசம் இன்று வெளிப்படையாகவே நடமாட ஆரம்பித்துவிட்டது. குளியறையிலும், ஒதுக்கு புறமான இடத்திலும் மறைத்து மறைத்து படித்த ஆபாச கதைகளை, இன்று தங்களுடைய தனி அறையிலேயே ஏ.சி.வசதியுடனேயே படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கூடவே, கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட்போன்களின் மூலம் ஆபாச படங்களையும் பார்க்க பழகிவிட்டனர். படங்களை தரவிறக்கம் செய்து பார்க்கும் இந்தக்காலத்திலும், டி.வி.டி.களின் ராஜ்ஜியம் நடக்கிறது என்றால், அதற்கு ஆபாச படங்களும் ஒரு காரணமாகின்றன.
ஆபாசத்தை ரசிக்கும் பழக்கம், இந்தியாவில் பலரது பழக்கமாக மாறியதால் இந்தியர்களை குறிவைத்தே புதுப்புது ஆபாசப் படங்களும், பிரத்யேக இணையதளங்களும் வந்து கொண்டே இருக்கின்றன. இதை பொழுதுபோக்கிற்காக பார்ப்பவர்களுடன், பணம் செலுத்தி பார்ப்பவர்களும் அதிகரித்துவிட்டனர். அவர்களுக்காகவே ஆபாச இணையதளங்கள், ரூ.30-ல் தொடங்கி ரூ.10,000 வரை கட்டணத்தை நிர்ணயித்து உள்ளன. அதிலும் மிகத்தெளிவான ஹெச்.டி. வீடியோக்கள் என்றால், நுழைவு கட்டணம் ரூ. 20 ஆயிரம் வரை நீளும். ஆபாச வீடியோக்களை பார்த்து சலித்தவர்கள், தங்களது அந்தரங்க ஆசைகளை புதுவிதமாக நிறைவேற்றி பார்க்கவும் ஆசைப்படுகிறார்கள். அதற்கும் சில இணையதளங்கள் ‘லைவ்-சாட்’ எனப்படும் நேரலை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளன.
இந்த இணையதளங்களில் நுழைவு கட்டணம் செலுத்தி தங்களை பதிவு செய்துகொண்டால், நம்முடைய கட்டளைக்கு தலையாட்டும் பொம்மைகளை போன்ற பெண்கள் நேரலையில் தோன்றுவார்கள். இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா... போன்ற பல நாடுகளில் இருந்தும் பலர் இந்த இணைய தளங்களில் இணைந்திருப்பதால், ஆசைக்கேற்ப ஆட்களை தேர்வு செய்யமுடியும். இவை பல இளையோரின் ஆசைகளைத் தீர்க்க வழியாக அமைகின்றன. தங்களை நல்லவராக சமூகத்தில் காண்பிக்க நினைப்பவர்கள் இத்தகைய ஆபாச இணைய தளங்கள் வழியாக தங்களது அந்தரங்க ஆசைகளை தீர்த்துக்கொள்கிறார்கள். மேலும் உடல் அழகை வெளிப்படுத்த விரும்பியும், ஆண்மையின் பெருமையை வெளிக்காட்டும் ஆசையாலும், ஆண், பெண் நட்புகளை உருவாக்கும் நோக்கத்துடனும், நிர்வாண உடலை பொழுதுபோக்காக காட்ட நினைத்தும் பலர் இத்தகைய இணையதளங்களில் இணைகின்றனர். சிலர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காகவும், இதில் இணைகிறார்கள். அதனால்தான் அந்தரங்க கதைகள், ஆபாச வீடியோக்கள், லைவ் செக்ஸ் சாட் சம்பந்தமான உலக மார்க்கெட்டில், இந்தியா முன்னேறிக்கொண்டே இருக்கிறது. இந்த வேகம் இணைய தலைமுறையினரின் எதிர்காலம் மீதான அச்சத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. ஏனெனில் சமீபகாலமாக அரங்கேறி வரும் காம களியாட்டங்களுக்கு, ஆபாசப் படங்களும் ஒருவித காரணமாகிவிட்டன.
‘போர்னோகிராபி’ என்பது, உடலுறவு சம்பந்தப்பட்ட காட்சிகளை மையப்படுத்தி எடுக்கப்படும் ஆபாச திரைப்படம். இதுபோன்ற திரைப்படங்களை எடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அனுமதி வழங்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க கற்பனை கதையில் உருவாகும் திரைப் படம் என்பதால், இதில் உறவு முறைகளை கொச்சப்படுத்தி எடுப்பதும் உண்டு. அதாவது ‘பிறர் மனை நோக்காதே’ என்பதற்கு எதிர்மறையாக உறவுமுறையிலும், வயது வித்தியாசமின்றியும் கதைக்களம் அமைத்து, உடலுறவு காட்சிகளை படம்பிடிப்பார்கள்.
இவை கற்பனை படங்கள் என்பதை உணர்ந்தவர்கள், எளிதில் கடந்துவிடுவார்கள். ஆனால் அதை உணராதவர்கள், அந்த படத்தில் நிகழ்த்தப்பட்டதை தங்களது நிஜ வாழ்விலும், நிகழ்த்தி பார்க்க முயலும்போதுதான் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல், ஆசிரியர்-மாணவர் இடையிலான காதல், கள்ளத்தொடர்பு, கூட்டாக நிகழும் பாலியல் வன்முறை... போன்ற பல பிரச்சினைகளுக்கு இத்தகைய ஆபாச படங்கள் காரணமாகிவிடுகின்றன. அதனால்தான் ஆபாசத்தை விரும்பும் இளையதலைமுறையினர் பற்றிய கவலை அதிகரித்திருக்கிறது.
ஆபாச இணையதளங்கள் பலவும் மேற்கத்திய கலாசாரத்தை மற்ற நாடுகளில் திணிக்கும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. நமது சமூகத்தில் அருவருப்பாகவும், ஆபாசமாகவும் பார்க்கப்படும் பல விஷயங்கள், மேற்கத்திய நாடுகளில் கலாசாரமாக கொண்டாடப்படுகின்றன. அவர்களின் கொண்டாட்டத்தைதான் நாம் பணம் செலுத்தி, ஆபாசம் என்ற பெயரில் ரசித்துக்கொண்டிருக்கிறோம். இதை மேற்கத்திய நாடுகள் ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் இந்திய இளையதலைமுறை கொண்டாடுவதுதான் பெரும் சிக்கலாக மாறியிருக்கிறது.
இதை உணர்ந்துகொண்ட இந்திய அரசாங்கம், இந்தியாவில் அதிகம் தேடப்படும் ஆபாச இணையதளங்களை முடக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறது. 2015-ம் ஆண்டு முதலே இத்தகைய முயற்சிகளில் இறங்கியிருக்கும் இந்திய அரசாங்கம், அந்த சமயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்களை முடக்க முயற்சித்தது. இருப்பினும் ஆபாச இணையதளங்களின் கொட்டம் அடங்கியபாடில்லை. புதுப்புது பெயர்களில் ஆபாச வீடியோக்களையும், அந்தரங்க கதை களையும் உள்ளடக்கிய இணையதளங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
அதேசமயம் இளைஞர்களின் காமப்பசிக்கு தீனி போடும் விதமாக குறிப்பிட்ட சில தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இலவச மொபைல் டேட்டாக்களை வழங்குகின்றன. இதன்மூலம் செலவில்லா சீரழிவு திட்டத்தின் வாயிலாக, இலவசமாகவே ஆபாச வீடியோக்களை பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆபாசம் என்பதை ‘ஆடை குறைபாடு’ என்ற சொற்களில் அடக்கிவிட முடியாது. அதையும் தாண்டி, அந்தரங்கமாக மட்டுமே நிகழ வேண்டிய செயல்களை பொது இடத்தில் அரங்கேற்றுவதையே ‘ஆபாசம்’ என்ற வார்த்தையின் அர்த்தமாக கொள்ளலாம்.
ஓர் இளைஞன் முன்பின் அறிமுகம் இல்லாத பெண்ணிடமும், ஓர் இளம்பெண் யாரென்றே தெரியாத ஆணிடமும் ‘வீடியோ சாட்’ மூலம் நிர்வாணமாகத் தன்னை அறிமுகம் செய்து கொள்வதும் ஆபாசமாக பார்க்கப்படுகிறது. இது எதிர்கால வாழ்வில் பல சிக்கல்களை உருவாக்க வாய்ப்புள்ளது.
சிலர் தினந்தோறும் இத்தகைய இணையதளங்களில் நேரத்தை செலவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது அவர்களது நிகழ்காலத்தை பாதித்து, எதிர்மறை சிந்தனைகளை மனதில் உருவாக்கும். திருமணத்துக்கு புறம்பான உடலுறவை ஊக்குவிக்கும் வகையிலான பல வீடியோக்களும் இத்தகைய தளங்களில் காணப்படுகின்றன.
ஓரினச்சேர்க்கை, தகாத உறவுமுறைகள், வயது வித்தியாசமில்லாத உறவுகள்... போன்றவற்றை தூண்டுவதாக இவை அமைந்துவிடுகின்றன.
இப்போது பெரும்பாலானோர் கேமரா உள்ள செல்போன் களையே பயன்படுத்துகின்றனர். அவர்களில் துடுக்கான சிலர் பூங்காக்கள், கடற்கரைகள் போன்ற பொது இடங்களில் அரங் கேறும் அந்தரங்ககாட்சிகளை ரகசியமாக படம்பிடித்து இத்தகைய இணையதளங்களில் பதிவேற்றம் செய்து விடுகின்றனர்.
ஆபாச இணையதளங்களும் காப்புரிமை பற்றி எவ்வித கவலையும் இன்றி வீடியோக்களைப் பதிவேற்றம் செய்ய அனு மதிக்கின்றன. அதேசமயம் சிறந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களுக்கு தக்க சன்மானமும் வழங்குகின்றன. இலவசமாக ஆபாச வீடியோக்களை காண்பித்து, அதுபோன்ற தவறான உறவுகளில் ஈடுபட வைத்து, அதை வீடியோவாக எடுத்து, தங்களுடைய இணையதளங்களை பலப்படுத்தி கொள்கின்றன.
அமேசான் மற்றும் அந்தமான் காடுகளில் இன்றளவும் ஆடை அணியாமல் வாழும் சில பழங்குடி சமூகங்கள் கட்டுக்கோப்பான ஒழுக்கம் கொண்டவர்களாக வாழ்கின்றனர். கோவணத்துடன் வயலில் வேலை செய்யும் விவசாயிகளையோ, குறைந்த உடையுடன் சாக்கடைகளைத் தூய்மை செய்வோரையோ யாரும் ஆபாசமாக பார்ப்பதில்லை. ஆகவே, நிர்வாணமோ குறைவான ஆடையோ ஒருவரை ஆபாசம் என்ற வரம்புக்குள் கொண்டு வராது. நமது எண்ணங்களே எது ஆபாசம் என்று முடிவு செய்கிறது.
நிர்வாணம் என்பது இயல்பாகவே தவறானது அல்ல. கெட்ட எண்ணம் கொண்ட பார்வையில் அது ஆபாசமாக மாறுகிறது. எதையும் இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியாத சிந்தனையே ஆபாசத்தின் எல்லையைத் தீர்மானம் செய்கிறது. சமூகத்தில் நிகழும் பாலியல் வன்முறைகளுக்கும் ஒழுக்கக்கேடுகளுக்கும் ஆபாச இணையதளங்கள் தீனி போடுகின்றன. இனப்பெருக்கத்திற்காக இயற்கை தந்துள்ள பாலுணர்வைத் தவறான வழியில் பயன்படுத்த இளையோரை அவைத் தூண்டுகின்றன என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.
தனியாக இருக்கும் பிள்ளைகள் அதிக அளவில் ஆபாச இணையதளங்களுக்கு அடிமையாவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இளம் வயதினருக்கு செல்போன்களைக் கொடுத்து வளர்க்கும் பெற்றோர்கள், அவர்கள் அவற்றை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை கவனிப்பது அவசியம். எது தவறு என்று சுட்டிக் காட்டுவதை விடவும், குழந்தைகள் சரியானவற்றைத் தேர்ந்தெடுத்து முன்னேற உடனிருந்து பயிற்சி அளிப்பது நன்மை பயக்கும். இளையோரும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால், வருங்காலத்திலும் கட்டுப்பாடான சமூக ஒழுக்கத்தைப் பாதுகாக்க முடியும்.
இந்தியாவிற்கு 3-வது இடம்
‘பார்ன்’ (porn) எனப்படும் ஆபாச படங்களை அதிகம் தேடி ரசிப்பவர்கள் பட்டியலில் இந்தியாவிற்கு 3-வது இடம் கிடைத்திருக்கிறது. இது 2017-ம் ஆண்டு வெளியான புள்ளிவிவரம் என்பதால், இப்போது 2-வது இடத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் புள்ளிவிவரம் வெளியான சமயத்தில் இந்தியாவிற்கும், இரண்டாம் இடத்தில் இருந்த இங்கிலாந்திற்கும் இம்மியளவே வித்தியாசம் இருந்தது. இந்நேரம் 2-வது இடத்தில் அமர்ந்து கொண்டு முதலிடத்தை (அமெரிக்கா) நோக்கி பயணிக்கும் அவலமும் அரங்கேறலாம்.
சரியான போட்டி
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சந்தைக்குள் 4-ஜி வேகத்தில் நுழைந்து பட்டித்தொட்டியெல்லாம் பிரபலமான நிறுவனம் ஒன்று, சமீபத்தில் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிடுக்கிப்பிடி போட்டது. அதாகப்பட்டது என்னவென்றால், நிறுவனத்தின் சார்பாக வழங்கப்படும் 2 ஜி.பி. இலவச மொபைல் டேட்டாவில் ஆபாச வலைத்தளங்கள் இயங்காதபடி, குறிப்பிட்ட சில ஆபாச வலைத்தளங்களை முடக்கினர். இந்த நட வடிக்கை செயல்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே, முடக்கப்பட்ட ஆபாச வலைத்தளங்கள் தங்களது இணையதள முகவரிகளை ‘.காம்’ என்பதில் இருந்து ‘.நெட்’ என மாற்றிக்கொண்டு, மீண்டும் நுழைந்துவிட்டன.
பெருகி வரும் நிர்வாண கலாசாரம்
பழங்கால கிரேக்க கலாசாரத்தில், ஆடைகளுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. பண்டைய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், வீரர்கள் நிர்வாண நிலையிலேயே கலந்துகொண்டதாக வரலாறு பதிவு செய்கிறது. கிரேக்கர்கள் தங்கள் தெய்வங்களின் சிலைகளைக் கூட நிர்வாணமாகவே செய்து வைத்துள்ளனர். அங்கு நிர்வாணம் என்பது ஒரு கலாசாரமாகவே இருந்து வந்ததாக அறியப்படுகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பலவற்றில், மக்கள் நிர்வாணமாக பொழுதைக் கழிப்பதற்கு சில பொது இடங்கள், குறிப்பாக கடற்கரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நிர்வாண விளையாட்டுகள், பொழுதுபோக்குகள், உடற்பயிற்சிகள், மசாஜ் போன்றவை பல நாடுகளில் கலாசாரத்தின் அங்கமாக மாறியுள்ளன. அந்தரங்க காரியங்களை பொதுவெளியில் நடத்தும் முயற்சிகளும் சிறிது சிறிதாக அதிகரித்து வருகின்றன. அவர்கள் விரிக்கும் நிர்வாண வலையில் சிக்கிக்கொள்ளாமல், இருப்பதுதான் இளையதலை முறையினருக்கு பெரும்சவாலாக இருக்கப்போகிறது.
-டே. ஆக்னல் ஜோஸ்
-டே. ஆக்னல் ஜோஸ்