சாலையோரம் குவிந்து கிடக்கும்குப்பை கழிவுகளால் பொதுமக்கள் அவதி
கவுரிபிதனூர் அருகே சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளால் பொதுமக்கள் அவதி கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?;
சிக்பள்ளாப்பூர்:
கவுரிபிதனூர் அருகே சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். இதனால் இந்த குப்பைகளை அகற்றும்படி கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பை
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூர் தாலுகா தொண்டேபாவியை அடுத்து உள்ளது அழகாபுரா கிராமம். இந்த கிராமத்தில் கடந்த சில மாதமாக சரியான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது சாலையோரங்களில் கிடக்கும் குப்பைகளை அகற்ற கிராம பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குப்பை கழிவுகள் தற்போது அந்த பகுதியில் உள்ள கால்வாய்களை ஆக்கிரமித்துள்ளது. இதனால் கழிவு நீர் கால்வாயில் செல்லாமல் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தவிர சாலையோரம் புதர்கள் மண்டி கிடப்பதால் பாம்புகள் அதிகளவு காணப்படுகிறது.
இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அந்த சாலை வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழை நேரங்களில் இந்த குப்பை கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து இருப்பதால், கிராம மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. எனவே அந்த கிராம மக்கள் குப்பை கழிவுகளை உடனே அகற்றவேண்டும். கழிவு நீர் கால்வாயை சீரமைத்து கொடுக்கவேண்டும் என்று அழகாபுரா கிராம பஞ்சாயத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, ஏற்கனவே இந்த தொண்டேபாவி கிராமத்தில் குப்பைகளை சேகரித்து சுத்திகரிப்பு செய்வதற்கான மையம் உள்ளது. இந்த மையத்திற்கு தேவையான குப்பைகளை சேகரிக்க வீடு வீடாக குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டது. அதன்படி பொதுமக்கள் வீதிகளில் குப்பைகளை கொட்ட கூடாது. கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் நேரடியாக வீட்டிற்கு வந்து வாகனங்கள் மூலம் குப்பைகளை சேகரித்து செல்வார்கள் என்று கூறப்பட்டது. இதற்காக கிராம பஞ்சாயத்து சார்பில் குப்பை சேகரிப்பதற்கான வாகனங்களும் வழங்கப்பட்டது.
ஆனால் குப்பைகள் மட்டும் சேகரிக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் குப்பைகள் தேங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கிராம மக்கள் அந்த குப்பைகளை வீடுகளில் தேக்கி வைக்க விரும்பாமல், சாலையோரங்களில் வீசிவிட்டு செல்வதாக கூறப்படுகிறது. காலபோக்கில் இதுவே வழக்கமாகி தற்போது குப்பை மேடுகளாக காட்சி அளிக்கிறது. இந்த குப்பைகளால் அதே கிராமத்தை சேர்ந்த மக்களுக்குதான் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கிராம பஞ்சாயத்து நிர்வாகம் அல்லது நகரசபை நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இது குறித்து கிராம பஞ்சாயத்து வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஊழியர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்
இதை ஏற்ற கிராம பஞ்சாயத்து வளச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறி வருகின்றனர். இதுகுறித்து கிராம பஞ்சாயத்து வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறும்போது:-
தொண்டேபாவியில் குப்பை சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான குப்பைகளை சேகரிக்க முடியவில்லை. இதற்கு ஊழியர்கள் பற்றாக்குறையே காரணம். ஊழியர்கள் இல்லாததால் வீடுகள் தோறும் சென்று குப்பைகளை சேகரிக்க முடிய வில்லை. இதனால் வீடுகளில் குப்பைகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த குப்பைகளை வீதிகளில் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உடனே ஊழியர்களை நியமித்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அழகாபுரா கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் இதற்கான பணிகளில் ஈடுபடுவார்கள் என்றார்.