புலி நகத்துடன் கூடிய சங்கிலி அணிந்த கலசா உதவி வனச்சரக அலுவலர் கைது
புலி நகத்துடன் சங்கிலி அணிந்த விவகாரம் தொடர்பாக கலசா உதவி வனச்சரக அலுவலர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.;
சிக்கமகளூரு-
புலி நகத்துடன் சங்கிலி அணிந்த விவகாரம் தொடர்பாக கலசா உதவி வனச்சரக அலுவலர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.
புலி நகம் சங்கிலி விவகாரம்
கர்நாடகத்தில் புலி நகம் உள்பட வனவிலங்குகளின் உடல் உறுப்புகளை முக்கிய நபர்கள் வைத்திருந்த விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது. இதுதொடர்பாக நடிகர்கள் தர்ஷன், ஜக்கேஷ், நிகில்குமாரசாமி உள்பட 6 பேரின் வீடுகளில் வனத்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அரசியல் கட்சி பிரமுகர்கள், பிரபலங்கள், அதிகாரிகள் புலி நகத்துடன் சங்கிலி மற்றும் வனவிலங்குகள் உடல் உறுப்புகளை வைத்திருப்பதாக தகவல் உலா வருகின்றன.
இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டம் கலசா உதவி வனச்சரக அலுவலர் தர்ஷன் என்பவர் புலி நகத்துடன் சங்கிலி அணிந்திருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அரனூர் கிராமத்தை சேர்ந்த சுப்ரீத் மற்றும் அப்துல் ஆகியோர் ஆல்தூர் வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
பணியிடை நீக்கம்
இந்த நிலையில் புலி நகம் சங்கிலி அணிந்ததாக பதிவான புகார் குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி உதவி வனச்சரக அலுவலர் தர்ஷனுக்கு வனத்துறை அறிவுறுத்தி இருந்தது. மேலும் நோட்டீசும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தர்ஷன் விசாரணைக்கு ஆஜராகவில்லை என தெரிகிறது. இதனால், உதவி வனச்சரக அலுவலர் தர்ஷனை பணியிடை நீக்கம் செய்து வனத்துறை அதிகாரி நந்தீஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய என்.ஆா்.புரா வனத்துறையினருக்கு நந்தீஷ் உத்தரவிட்டார்.
கைது
அதன்பேரில் என்.ஆர்.புரா வனத்துறை அதிகாரிகள், உதவி வனச்சரக அலுவலர் தர்ஷன் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கர்நாடகத்தில் புலி நக சங்கிலி விவகாரம் விசுவரூபம் எடுத்து வரும் நிலையில் வனத்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.