ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரத்தை மூடி மறைக்க அரசு முயற்சி: சித்தராமையா குற்றச்சாட்டு

ஒப்பந்ததாரர் விவகாரத்தை மூடிமறைக்க அரசு முயற்சி செய்வதாக சித்தராமையா குற்றம்சாட்டினார்.;

Update:2022-07-23 22:57 IST

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நிதி ஒதுக்கவில்லை

கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மந்திரியாக இருந்த ஈசுவரப்பா கூறியதால் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டதாகவும், ஆனால் அதற்கான நிதியை ஒதுக்கவில்லை என்றும் கூறி ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு அவரே பொறுப்பு என்றும் 'வாட்ஸ்அப்' தகவலை வெளியிட்டார்.

இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடுமாறு நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் நீதி விசாரணை கோரிக்கையை ஏற்கவில்லை. இப்போது போலீசார் தங்களின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். அதில் ஈசுவரப்பா குற்றமற்றவர் என்று குறிப்பிட்டுள்ளனர். கமிஷன் தொல்லையால் தான் சந்தோஷ் பட்டீல் தற்கொலை செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் இந்த விஷயத்தை மூடி மறைக்க அரசு முயற்சி செய்கிறது.

இட ஒதுக்கீடு

உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நீதிபதி தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த கோரிக்கையை நான் முதலில் இருந்தே வலியுறுத்தி வருகிறேன். எனக்கு 75-வது ஆண்டுகள் நிரம்புவதையொட்டி தாவணகெரேயில் எனது ஆதரவாளர்கள் பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்கிறார்கள். இதை பா.ஜனதாவினர் விமர்சிக்கிறார்கள். அதை பற்றி நான் கவலைப்படவில்லை.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்