திராவிடர்களே நாட்டின் பூர்வ குடிகள்: சித்தராமையா பரபரப்பு பேட்டி
திராவிடர்களே நாட்டின் பூர்வ குடிகள் என்று சித்தராமையா கூறியுள்ளார்.;
பெங்களூரு:
ஜனநாயக வேர்கள்
முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு நாளையொட்டி பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள கர்நாடக காங்கிரஸ் அலுவலகத்தில் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாா், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டு, நேருவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நாட்டை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஜனநாயக ரீதியாக கட்டமைத்தவர் நேரு. நாட்டில் அனைத்து பகுதிகளிலும் ஜனநாயக வேர்கள் ஆழமாக வேரூன்ற செய்தவர். அரசியல் சாசன அமைப்புகளை உருவாக்கி அவற்றுக்கு அதிகாரம் வழங்கியவர் நேரு. அவர் அடித்தளம் நன்றாக அமைத்ததால் தான் நாடு இன்று இந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.
அடித்தளமே காரணம்
ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறிய போது இங்கு என்ன இருந்தது?. கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயம், தொழில்நுட்பம், அறிவியல் வளர்ச்சியை பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி முன்னேற்றம் அடைய செய்தார். நாடு சுதந்திரம் அடைந்தபோது படிப்பறிவு விகிதம் 18 ஆக இருந்தது. அது இன்று 80 சதவீதமாக அதிகரித்துள்ளது. அவர் அமைத்த அடித்தளமே இதற்கு காரணம்.
ஆனால் தற்போது பிரதமராக உள்ள மோடி இவற்றுக்கு எதிரானவர். நேரு உருவாக்கிய கல்வி நிறுவனங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளை சீரழிக்கும் பணியை மோடி செய்து கொண்டிருக்கிறார். ஐந்தாண்டு திட்டங்களை கொண்டு வந்தது நேரு. ஆனால் பிரதமர் மோடிக்கு நாட்டை வழிநடத்த தெரியவில்லை. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் நாட்டை கொண்டு செல்லும் வகையில் அபாயகரமான நிகழ்வுகள் நடக்கின்றன.
நாடடின் பூர்வ குடிகள்
ஆர்.எஸ்.எஸ். திராவிடர்களா?. அவர்கள் ஆரியர்கள். அவர்கள் இந்தியர்களா?. திராவிடர்கள் தான் நாட்டின் பூர்வ குடிகள். இதை எல்லாம் சொன்னால் என்ன ஆகும். அதனால் யாரும் வரலாற்றை கிளறி பார்க்க கூடாது. இதுபற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. அம்பேத்கர், வரலாறு தெரியாதவர்களால் எதிர்காலத்தை வடிவமைக்க முடியாது என்று கூறினார். உண்மையான வரலாறு குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு பயம் உள்ளது.
உண்மையான வரலாற்றை உழைக்கும் வர்க்கத்தினர், திராவிடர்கள் தெரிந்து கொண்டால் என்ன ஆகும் என்பது அந்த அமைப்பினருக்கு தெரியும். அதனால் தான் வரலாற்றை திரிக்க பார்க்கிறார்கள். பாடநூல் குழு தலைவர் பதவிக்கு ரோகித் சக்ரதீர்த்த போன்றோரை நியமனம் செய்வதே வரலாற்றை திரிக்கவே. தற்போது நாட்டில் நடக்கும் விஷயங்கள் மக்களுக்கு தெரியக்கூடாது என்று கருதி சாதி-மதங்கள் குறித்து பேசி திசை திருப்புகிறார்கள். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
சித்தராமையா நாடோடி
ஆர்.எஸ்.எஸ். குறித்த சித்தராமையாவின் கருத்துக்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்து கூறியுள்ள முன்னாள் மந்திரி ஈசுவரப்பா, "சித்தராமையா ஒரு அயோக்கியர், நாடோடி. சோனியா காந்தியை திருப்திப்படுத்த இவ்வாறு அவர் கூறுகிறார். ஆர்.எஸ்.எஸ். நாட்டிற்கு சேவையாற்றும், தேசபக்தியை வளர்க்கும் அமைப்பு" என்றார்.