மக்களின் நிலை பார்த்து பசவராஜ் பொம்மைக்கு கண்ணீர் வரவில்லையா?- குமாரசாமி கேள்வி

பெங்களூருவில் மழைக்கு 2 பேர் பலியாக அரசே முழு பொறுப்பு என்றும், மக்களின் நிலையை பார்த்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கண்ணீர் வரவில்லையா? என்று குமாரசாமி கேள்வி எழுப்பு உள்ளார்.;

Update:2022-06-18 22:37 IST

பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

பெங்களூருவில் நேற்று (நேற்று முன்தினம்) பெய்த கனமழை காரணமாக கே.ஆர்.புரம், சாய் லே-அவுட் வெள்ளத்தில் மிதக்கிறது. கடந்த முறை பெய்த மழையின்போது கூட அந்த பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. பெங்களூருவில் தொடர்ந்து பெய்யும் மழையால் கே.ஆர்.புரம் தொகுதியில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அந்த தொகுதியில் வசிக்கும் மக்கள் மழையின் காரணமாக தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

கடந்த 9 ஆண்டுகளில் கே.ஆர்.புரம் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?. அந்த தொகுதியின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் என்ன வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. சாக்கடை கால்வாய்கள் சரி செய்யப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை. கடந்த முறை மழையின் போது பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற மந்திரியுடன் வாக்குவாதம் செய்தார்கள். எனவே கே.ஆர்.புரம் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிடவேண்டும்.

கண்ணீர் வரவில்லையா?

மழையால் பெங்களூருவில் ஒரு வாலிபர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டும், மற்றொரு மூதாட்டியும் உயிர் இழந்துள்ளனர். உயிர் இழந்தவர்கள் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். வேலைத்தேடி பெங்களூருவுக்கு வந்த வாலிபர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பலியான சம்பவம் வேதனை அளிக்கிறது. அந்த வாலிபருக்கு உரிய நிவாரணம் வழங்குவது அரசின் பொறுப்பாகும்.

சினிமா படத்தில் நாய் செத்ததற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கண்ணீர் விடுகிறார். மழையால் மக்கள் பாதிக்கப்பட்டு கண்ணீர் விடுவதை பார்க்கும் போதும், 2 பேர் பலியானதை நினைத்தும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கண்ணீர் வரவில்லையா?. எதற்காக அவருக்கு கண்ணீர் வரவில்லை. மழையால் 2 பேர் பலியாக அரசே முழு பொறுப்பாகும்.

இவ்வாறு குமாரசாமி

கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்