நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீச குவிந்த மல்யுத்த வீரர்கள்...!

மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷணை கைது செய்யக்கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-05-30 13:00 GMT

ஹரித்வார்,

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக மந்திரியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்கள் நேற்று முன்தினம் நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவையொட்டி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். இதை போலீசார் தடுத்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த இக்கட்டான சூழலில் வேறு வழியின்றி போலீசார் அவர்களை கைது செய்தனர். பஜ்ரங் புனியா மற்றும் சாக்சி மாலிக் உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அன்று இதுபோன்ற பிரச்சினைக்கு டெல்லி முழுவதும் 700 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகு, அங்கு இருந்த கொட்டகைகள் அனைத்தும் பெயர்த்து எடுக்கப்பட்டன. இனிமேல் மல்யுத்த வீரர்களுக்கு ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படாது என டெல்லி போலீசார் நேற்று தெரிவித்தனர்.

இந்நிலையில், தேசிய சர்வதேச போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதங்களை கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீரர் வீராங்கனைகள் அறிவித்தனர்.

இதற்காக டெல்லியில் இருந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தாங்கள் வாங்கிய பதக்கங்களுடன் உத்தர்காண்ட் மாநிலம் ஹரித்வாருக்கு தற்போது வந்துள்ளனர்.

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக மந்திரியும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ்பூஷணை கைது செய்யக்கோரி ஒலிம்பிக் உள்பட பல்வேறு தொடர்களின் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை ஹரித்வாரில் கங்கை நதியில் வீச மல்யுத்த வீரர், வீராங்கனைகள் குவிந்துள்ளனர். தாங்கள் வாங்கிய பதக்கங்களை கங்கை நதியில் வீச மல்யுத்த வீரர்கள் கண்ணீர் மல்க நிற்கும் காட்சிகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்