காங்கிரஸ் அரசின் சக்தி திட்டம் இன்று தொடக்கம்; 18,703 பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்
காங்கிரஸ் அரசின் சக்தி திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. பெண்கள் 18,703 பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.;
பெங்களூரு:
பெங்களூருவில் 5,102 பஸ்கள்
காங்கிரஸ் அரசின் 5 இலவச உத்தரவாத திட்டங்களில் ஒன்றான அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குகிறது. அரசின் சொகுசு பஸ்கள் தவிர்த்து மற்ற அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம். அதன்படி, கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் செயல்படும் 4 போக்குவரத்து கழகங்களின் மூலமாக இயக்கப்படும் பஸ்களில், எத்தனை பஸ்களில் பெண்கள் பயணிக்கலாம் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்கள் ஒட்டு மொத்தமாக 5,547 பஸ்கள் இயக்கப்படுகிறது. இவற்றில் குளிர்சாதன வசதிகள் கொண்ட பஸ்களை தவிர்த்து 5,102 பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.எஸ்.ஆர்.டி.சி. மூலமாக...
இதுபோல், கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் மாநிலம் முழுவதும் 7,482 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றில் குளிர்சாதன வசதி, படுக்கை வசதி கொண்ட பஸ்களை தவிர்த்து, 6,239 கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
இதுபோன்று என்.டபுள்யூ.கே.ஆர்.டி.சி. சார்பில் 4,106 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 3,376 பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள முடியும். மேலும் கே.கே.ஆர்.டி.சி. சார்பில் 4,106 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில், 3,376 பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாதம் ஒரு கோடி பெண்கள்
இதன்மூலம் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 18,703 பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் பெங்களூரு பி.எம்.டி.சி. பஸ்களை தவிர்த்து மற்ற 3 போக்குவரத்து கழகங்களிலும் 50 சதவீத பெண்கள் பயணம் செய்ய இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 50 சதவீத இருக்கைகள் ஆண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக ஆண்களுக்கு பஸ்களில் 50 சதவீத இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருப்பது கர்நாடகத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் ஒரு அரசு பஸ்சில் ஆண்கள் இருக்கைகள் காலியாக இருந்தால், அந்த இருக்கைகளில் பெண்கள் பயணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. சொகுசு பஸ்கள் தவிர்த்து, மாநிலம் முழுவதும் இயக்கப்படும் மற்ற பஸ்களில் ஒரு நாளுக்கு 3 லட்சத்து 44 ஆயிரத்து 25 பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் ஒரு மாதம் முழுவதும் ஒரு கோடியே 2 லட்சத்து 750 பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள முடியும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.