குடும்ப தகராறில் கழுத்தை நெரித்து பெண் படுகொலை

குடும்ப தகராறில் கழுத்தை நெரித்து பெண்ணை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்த சம்பவம் சக்லேஷ்புரா தாலுகாவில் நடந்துள்ளது.

Update: 2023-03-27 21:01 GMT

ஹாசன்:-

தம்பதி

ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா பெலகோடு ஹோப்ளி அருகே மூகலி கிராமத்தைச் சேர்ந்தவர் உமேஷ். இவரது மனைவி வித்யா(வயது 24). கடந்த 15 நாட்களாக வித்யா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் சாந்திகிராமா கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நலம் தேறிய வித்யா, மீண்டும் தனது கணவர் வீட்டுக்கு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி அன்று இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தூங்கி விட்டனர். இந்த நிலையில் நள்ளிரவில் விழித்தெழுந்த உமேஷ், தனது மனைவி மீதிருந்த ஆத்திரத்தில் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

கழுத்தை நெரித்து கொலை

பின்னர் அவர், வித்யாவின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது வித்யா திடீரென உயிரிழந்து விட்டதாக அவர் கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பதறிப்போய் ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் வித்யாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவர்கள் இதுபற்றி சக்லேஷ்புரா புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வித்யாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

கைது

இதையடுத்து போலீசார் உமேசை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், குடும்ப தகராறில் மனைவி வித்யாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் உமேசை கைது செய்தனர். பின்னர் வித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்