காட்டுப்பன்றியுடன் சண்டையிட்டு 11 வயது மகளை காப்பாற்றி தன்னுயிரை இழந்த தாய்...!

காட்டுப்பன்றியிடமிருந்து தன் மகளை காப்பாற்றிய தாய் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார்.

Update: 2023-02-27 06:35 GMT

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் கொர்பா மாவட்டம் டிலியமர் கிராமத்தை சேர்ந்தவர் துவசியா பைய் (வயது 45). இவரது மகள் ரிங்கி (வயது 11).

இதனிடையே, துவசியா தனது மகள் ரிங்கியை அழைத்துக்கொண்டு கிராமத்தில் உள்ள தோட்டத்திற்கு விவசாய வேலைக்காக சென்றுள்ளார். தோட்டத்தில் தான் வைத்திருந்த மண் வெட்டியை கொண்டு வேலை செய்துகொண்டிருந்தார்.

அப்போது, தோட்டத்தில் மறைந்திருந்த காட்டுப்பன்றி அங்கு அமர்ந்திருந்த ரிங்கியை நோக்கி வேகமாக ஓடி வந்தது. இதை கண்ட துவசியா வேகமாக சென்று தனது மகளை காட்டுப்பன்றியிடமிருந்து காப்பாற்ற முற்பட்டார். தான் கையில் வைத்திருந்த மண் வெட்டியால் காட்டுப்பன்றியை தாக்கினார்.

அப்போது, துவசியாவை காட்டுப்பன்றி கொடூரமாக தாக்கியது. காட்டுப்பன்றி தன்னை தாக்கியபோதும் தன் மகளை அவர் காட்டுப்பன்றி தாக்குதலில் இருந்து காப்பாற்றினார்.

துவசியா தனது மகளை அங்கிருந்து ஓடிவிடும்படி கூற ரிங்கி அங்கிருந்து ஓடி சென்று கிராமத்தினரிடமும், வனத்துறையினரிடமும் தெரிவித்தார்.

இதையடுத்து, அந்த தோட்டத்திற்கு கிராமத்தினரும், வனத்துறையினரும் விரைந்து வந்தனர். அப்போது, காட்டுப்பன்றியை துவசியா கொன்றிருந்தார். ஆனால், காட்டுப்பன்றி தாக்கியதில் முகம் உள்ளிட்ட உடல் பாகங்களில் படுகாயமடைந்த துவசியாவும் உயிரிழந்து கிடந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் துவசியாவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்