குரங்கு அம்மை நோயால் பாதித்த நபருடன் விமானத்தில் பயணித்த 6 பேர் தொடர்ந்து கண்காணிப்பு
குரங்கு அம்மை நோயால் பாதித்த நபருடன் விமானத்தில் பயணித்த 6 பேர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர் என உடுப்பி கலெக்டர் பேட்டி அளித்துள்ளார்.;
மங்களூரு;
இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பரவ தொடங்கி உள்ளது. நாட்டில் முதல் முறையாக கேரளாவை சேர்ந்தவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட கேரளா சேர்ந்த நபருடன் உடுப்பியை சேர்ந்த 6 பேர் ஒன்றாக பயணித்துள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதுகுறித்து உடுப்பி கலெக்டர் குர்மா ராவ் கூறுகையில், குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்தவருடன் உடுப்பியை சேர்ந்த 6 பேர் விமானத்தில் ஒன்றாக பயணித்து உள்ளனர்.
அவர்கள் 6 பேரையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர்கள் யாருக்கும் குரங்கு அம்மையின் நோய் அறிகுறி இல்லை. ஆனாலும் அவர்கள் சுகாதாரத்துறையின் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள் என்றார்.