கனகபுராவில் டி.கே.சிவக்குமாருக்கு சவால் அளிப்பாரா மந்திரி அசோக்?

Update: 2023-04-29 21:24 GMT

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் டி.கே.சிவக்குமார். ராமநகர் மாவட்டம் கனகபுரா பகுதியில் பிறந்த இவர் தனது அரசியல் பயணத்தை

காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடங்கினார். மேலும் முதன்முறையாக 1985-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சாத்தனூர் தொகுதியில் களம் இறங்கினார். அந்த தொகுதியில் ஜனதா கட்சி சார்பில் எச்.டி.தேவேகவுடா களம் இறங்கினார். மாநிலத்தில் மிக பிரபலமான தலைவரை எதிர்த்து போட்டியிட்ட டி.கே.சிவக்குமார் 29,809 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து நின்ற எச்.டி.தேவேகவுடாவிடம் (45,612) தோல்வியை தழுவினார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 15,803 ஆகும்.

அதைதொடர்ந்து 1989-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அதே சாத்தனூர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதில் 44,595 வாக்குகளை பெற்ற டி.கே.சிவக்குமார் 13,650 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனதாதளம் (ஜே.பி.) வேட்பாளர் சாமியை (30,945) வீழ்த்தினார். அதன்பிறகு டி.கே.சிவக்குமார் 1994-ம் ஆண்டு தேர்தலில் களம் கண்டார். இந்த தேர்தலில் 568 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி மகுடம் சூடினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனதாகட்சி வேட்பாளர் சாமி 47,702 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். டி.கே.சிவக்குமார் 48,270 வாக்குகளை பெற்றிருந்தார்.

அதைதொடர்ந்து 1999-ம் ஆண்டு தேர்தலிலும் சாத்தனூர் தொகுதியில் டி.கே.சிவக்குமார் போட்டியிட்டார். இவரை எதிர்த்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி களம் இறங்கினார். இந்த தேர்தலில் 14,387 வாக்குகள் வித்தியாசத்தில் டி.கே.சிவக்குமார் (56,050) வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எச்.டி.குமாரசாமி 41,663 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் தனது முதல் தேர்தலில் எச்.டி.தேவேகவுடாவிடம் பெற்ற தோல்விக்கு அவரது மகன் எச்.டி.குமாரசாமியை அவர் பழிக்குப்பழி வாங்கினார். அதன்பின்னர் 2004-ம் ஆண்டு தேர்தலிலும் இதே தொகுதில் போட்டியிட்ட டி.கே.சிவக்குமார் 51,603 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். அவரை எதிர்த்து ஜனதாதளம்(எஸ்) சார்பில் நின்ற விசுவநாத் 37,675 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 13,928 ஆகும்.

2008-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கனகபுரா தொகுதியில் டி.கே.சிவக்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். தொகுதி மாறி போட்டியிட்டாலும் டி.கே.சிவக்குமார் 68,096 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். அவரை எதிர்த்து ஜனதாதளம்(எஸ்) சார்பில் நின்ற விசுவநாத் 60,917 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். வாக்கு வித்தியாசம் 7,179 ஆகும். கடந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் அதே

தொகுதியில் போட்டியிட்ட அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனதாதளம்(எஸ்) கட்சியின் வேட்பாளர் பி.ஜி.ஆர்.சிந்தியாவை 31,424 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தேர்தலில் டி.கே.சிவக்குமார் 1,00,007 வாக்குகளையும், பி.ஜி.ஆர்.சிந்தியா 68,583 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

கடந்த தேர்தலிலும் கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட டி.கே.சிவக்குமார், 79,909 வாக்குகள் வித்தியாசத்தில் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளரான நாராயணகவுடாவை (47,643) வீழ்த்தினார். டி.கே.சிவக்குமார் 1 லட்சத்து 27 ஆயிரத்து 552 வாக்குகள் பெற்றார்.

வருகிற மே 10-ந் தேதி நடைபெற உள்ள தேர்தலிலும் டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் சார்பில் இந்த தொகுதியிலேயே களம் இறங்க உள்ளார். இந்த முறை முதல்-மந்திரிக்கான போட்டியில் இருக்கும் டி.கே.சிவக்குமார், மாநிலம் முழுவதும் பரம்பரம் போல சுழன்று காங்கிரசுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் நாகராஜூ களம் காண்கிறார். இங்கு டி.கே.சிவக்குமாரை வீழ்த்தவும், அவரை கனகபுரா தொகுதியிலேயே முடக்கவும் பலமான வேட்பாளரை நிறுத்த பா.ஜனதா வியூகம் அமைத்து வந்தது. இதனால், அந்த தொகுதியில் டி.கே.சிவக்குமாரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் மந்திரி ஆர்.அசோக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் டி.கே.சிவக்குமாருக்கு சவால் அளிக்க பா.ஜனதா திட்டமிட்டு வருகிறது. ஆனால் கனகபுரா தொகுதியை பொறுத்தவரை பா.ஜனதா பலவீனமாக உள்ளது. இது அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. டி.கே.சிவக்குமார் தனது தொகுதிக்கு உட்பட்ட பல பகுதியில் பல ஆயிரம் கோடிக்கு வளர்ச்சி பணிகள் மேற்கொண்டு உள்ளார். இதேபோல் இங்கு எம்.பி.யாக உள்ள அவரது தம்பி டி.கே.சுரேசும் பல வளர்ச்சி பணிகளை இந்த தொகுதியில் நிறைவேற்றி உள்ளார். இது டி.கே.சிவக்குமாருக்கு பலமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது எடுத்துள்ள நடவடிக்கை தொகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறைகளை வைத்து டி.கே.சிவக்குமாருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது. இது இவருக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது. ஊழல் குற்றச்சாட்டு, பா.ஜனதாவின் அரசியல் அழுத்தத்தை தாண்டி தனது கோட்டையாக உள்ள கனகபுராவில் டி.கே.சிவக்குமார் மீண்டும் வெற்றி பெறுவாரா?. அவருக்கு மந்திரி அசோக் சவால் அளிப்பாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்