எடியூரப்பாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்கியது ஏன்?;டி.கே.சிவக்குமார் கேள்வி

எடியூரப்பாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்கியது ஏன்? என்று டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2023-02-28 21:29 GMT

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எடியூரப்பாவுக்கு தொல்லை

மோடி நாட்டின் பிரதமர். அவரை நாங்கள் மதிக்கிறோம். பா.ஜனதாவில் எடியூரப்பாவுக்கு கொடுத்த தொல்லை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தபோது கண்ணீர் விட்டு அழுதார். கண்ணீருடன் சென்று ராஜினாமா செய்தார். எடியூரப்பாவின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுக்கு அமலாக்கத்துறை நோட்டீசு வழங்கியது. எடியூரப்பாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்கியது ஏன்?. ஆபரேஷன் தாமரை மூலம் பா.ஜனதா ஆட்சியை ஏற்படுத்தியவர் எடியூரப்பா. ஆனால் அவரிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை பா.ஜனதா பறித்து கொண்டது. எடியூரப்பா பிறந்த நாள் விழாவை நடத்த அக்கட்சி அனுமதி அளிக்கவில்லை. சிவமொக்கா விமான நிலைய தொடக்க விழாவில் எடியூரப்பா மீது பிரதமர் மோடி அதிக அன்பு காட்டினார். இந்த அன்பை இத்தனை நாட்களாக ஏன் காட்டவில்லை.

மக்கள் நம்ப மாட்டார்கள்

எடியூரப்பா தலைமையில் சட்டசபை தேர்தலை பா.ஜனதா சந்திக்க வேண்டும். அதை விடுத்து அரசியலில் அரங்கேற்றப்படும் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். லிங்காயத் சமூக வாக்குகள் போய்விடுமோ என்று கருதி எடியூரப்பா மீது அன்பு காட்டுவது போல் நடிக்கிறார்கள். நிஜலிங்கப்பா, வீரேந்திர பட்டீலை காங்கிரஸ் அவமதித்ததாக மோடி கூறியுள்ளார். வீரேந்திர பட்டீலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து ராஜீவ்காந்தி வேறு ஒருவரை முதல்-மந்திரி ஆக்கினார்.

நாட்டில் ஊழலின் தலைநகராக கர்நாடகம் மாறியுள்ளது. இதுகுறித்து மோடி பேச வேண்டியது தானே?. முன்பு பசவராஜ் பொம்மை தலைமையில் தேர்தலை சந்திப்பதாக பா.ஜனதா கூறியது. இப்போது மோடி தலைமையில் தேர்தலை சந்திப்பதாக சொல்கிறார்கள். பா.ஜனதா இல்லாத கர்நாடகம் உருவாகும் நிலை வந்துள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் 7-வது ஊதிய குழு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை அமல்படுத்தப்படும். அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளதால், அரசு எந்திரம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்