'தாமரை மலரும் இடங்களில் அமைதியும், வளமும் இருக்கிறது' - மத்திய மந்திரி சர்பானந்த சோனோவால்

பிரதமர் மோடியின் தலைமையில் இழந்த நம்பிக்கையை இந்தியா மீண்டும் பெற்றுள்ளது என சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.

Update: 2024-02-11 16:45 GMT

Image Courtesy : ANI

திஸ்பூர்,

அசாம் மாநிலம் கவுகாத்தியில் பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சுவர்களில் தாமரை சின்னத்தை வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய துறைமுகங்கள் துறை மந்திரி சர்பானந்த சோனோவால் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது அவர் பேசியதாவது;-

"பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல் மிக்க தலைமையின் கீழ், காங்கிரஸ் கட்சியின் திறமையற்ற, தவறான நிர்வாகத்தால் ஏற்பட்ட இருண்ட காலத்திலிருந்து நமது நாடு வெளியேறியுள்ளது. உலகின் மிகவும் நம்பிக்கைக்குரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்த போதிலும், காங்கிரஸ் கட்சியின் ஊழல் நிறைந்த ஆட்சியின் காரணமாக இந்தியாவால் வறுமையிலிருந்து மீள முடியவில்லை.

2014 முதல் பிரதமர் மோடியின் எழுச்சியூட்டும் தலைமையின் கீழ், இழந்த நம்பிக்கையை இந்தியா மீண்டும் பெற்றுள்ளது. மோடி அரசின் முயற்சியால் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி இந்தியர்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்க முடிந்தது.

காங்கிரஸ் கட்சியின் தவறான அணுகுமுறை காரணமாக வடக்கு கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பல தசாப்தங்களாக பாதிக்கப்பட்டனர். பிரதமர் மோடியின் தலைமையில் கிளர்ச்சியாளர்களுடன் நடத்தப்பட்ட பல்வேறு அர்த்தமுள்ள உரையாடல்களுக்குப் பிறகு, வடகிழக்கின் பல்வேறு பகுதிகளில் அமைதி திரும்பியுள்ளது. தாமரை எங்கு மலர்கிறதோ அங்கு அமைதியும், வளமும் இருக்கும்."

இவ்வாறு சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்