பெங்களூரு மாநகராட்சி தேர்தல் எப்போது?; மந்திரி ராமலிங்க ரெட்டி பதில்

பெங்களூரு மாநகராட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து மந்திரி ராமலிங்க ரெட்டி பதில் அளித்துள்ளார்.

Update: 2023-06-04 21:21 GMT

பெங்களூரு:

ராமலிங்க ரெட்டி ஆலோசனை

பெங்களூரு மாநகராட்சிக்கு 2¾ ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. தற்போது மாநிலத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்திருப்பதால், மாநகராட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது. பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்துவதற்காக மந்திரி ராமலிங்க ரெட்டி தலைமையில் ஒரு குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.

அந்த குழுவினர் முதல் முறையாக பெங்களூருவில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். அப்போது வார்டு மறுவரையறை செய்தல், இடஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. என்றாலும், முதல் கூட்டத்திலேயே பெங்களூரு மாநகராட்சி தேர்தலை எப்போது நடத்தலாம் என்பது பற்றி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து மந்திரி ராமலிங்க ரெட்டியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

2 ஆண்டுகள் 8 மாதம் ஆகிவிட்டது

பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்பட்டு 2 ஆண்டுகள் 8 மாதங்கள் ஆகிறது. வருகிற செப்டம்பர் மாதம் வந்தால் மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிடும். பொதுவாக வார்டு கவுன்சிலர்கள் இல்லாததால் வளர்ச்சி பணிகள் சரியாக நடைபெறுவதில்லை. தற்போதும் பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளதால், வளர்ச்சி பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது.

மாநகராட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி முதல்-மந்திரி சித்தராமையாவும் தெரிவித்துள்ளார். அதன்படி, வார்டு வரையறை செய்தல், இடஒதுக்கீடு பணிகளை மேற்கொள்ளும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த பணிகள் முடிந்ததும் கூடிய விரைவில் பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடத்தப்படும். எக்காரணத்தை கொண்டும் தாமதம் செய்யப்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்