மேற்கு வங்காளம்: ஹிஜாப், காவி உடை விவகாரத்தில் பள்ளி சொத்துகள் சூறை, தேர்வு ரத்து
மேற்கு வங்காளத்தில் மாணவர்கள் இடையே ஹிஜாப், காவி விவகாரத்தில் பள்ளி சொத்துகள் சூறையாடப்பட்டன. 11, 12-ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.;
ஹவுரா,
மேற்கு வங்காளத்தின் ஹவுரா நகரில் துலாகார் பகுதியில், மாணவ மாணவிகள் படிக்க கூடிய உயர்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இதில், கடந்த திங்கட் கிழமை மாணவர்கள் சிலர் நாமபாலி எனப்படும் காவி உடையான மேல் துண்டை அணிந்து சென்றுள்ளனர். இதற்கு ஹிஜாப் அணிந்திருந்த மாணவிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது பள்ளி சீருடையல்ல என ஒருவர் கூறியுள்ளார். அதற்கு அந்த மாணவர்கள், மாணவியை நோக்கி பின்னர் ஏன் ஹிஜாப் அணிந்து வந்திருக்கிறாய்? என்று கேட்டுள்ளனர்.
இந்த தகராறில் ஒரு மத பிரிவினர், பள்ளியை சூறையாடி சொத்துகளை சேதப்படுத்தி உள்ளனர். அவர்களை ஆசிரியர்கள் தடுத்து நிறுத்த முயன்று உள்ளனர். அவர்களை வெளியே தள்ளியுள்ளனர்.
இதனால், நிலைமை மோசமடைந்தது. கட்டுக்கடங்காத நிலை ஏற்பட்ட சூழலில், போலீசார் மற்றும் அதிவிரைவு படை உடனடியாக சம்பவ பகுதிக்கு வரவழைக்கப்பட்டது.
இதன்பின்னர் 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதுபற்றி பள்ளி நிர்வாக குழு தலைமையில் கூட்டம் நடந்தது. அதில், இனி மாணவர்கள் பள்ளி சீருடையிலேயே வரவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இந்த பள்ளியில் இதற்கு முன்பு இப்படி நடந்தது இல்லை என கூறப்படுகிறது.