மேற்குவங்காள வன்முறை: முதல்-மந்திரி மம்தா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - பாஜக
மம்தா பானர்ஜி மேற்குவங்காள முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக தெரிவித்துள்ளது.
டெல்லி,
வடமாநிலங்களில் இந்து மத பண்டிகையான ராம நவமி கடந்த 30-ம் தேதி கொண்டாடப்பட்டது. அந்த வகையில் பீகார், மேற்குவங்காளம் மாநிலங்களில் ராம நவமி பண்டிகையின் போது சிலர் ஊர்வலமாக சென்றனர்.
அப்போது, ஒரு சில பகுதிகளில் மத ரீதியிலான வன்முறை வெடித்தது. இந்து - இஸ்லாமிய மதத்தினர் இடையே இந்த மோதல் வெடித்தது. மேற்குவங்காளத்தின் கவுரா மாவட்டம் ஷிப்பூர், காசிபரா பகுதிகளில் ஏற்பட்ட வன்முறையில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இரு தரப்பும் மாறி மாறி கற்கலை வீசி தாக்குதல் நடத்தியதில் பலர் படுகாயமடைந்தனர். வன்முறையை கட்டுப்படுத்த கவுராவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே, அம்மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டத்திலும் நேற்று வன்முறை நடைபெற்றது. பாஜகவினர் மேற்கொண்ட பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பாஜக எம்.எல்.ஏ. உள்பட பலர் படுகாயமடைந்துள்ளர்.
இந்நிலையில், வன்முறை சம்பவங்களை தொடர்ந்து மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.பி. லாகெட் சாடர்ஜி கூறுகையில், மேற்குவங்காளம் ஹவுராவில் ராமநவமியன்று எப்படி வன்முறை நடந்தது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். வன்முறை நடந்த தினத்தில் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தினார். இஸ்லாமிய மதத்தினர் இந்து மதத்தினர் மீது தாக்குதல் நடத்திய நிலையில் மம்தா ஊடகங்கள் திசைதிருப்பினார். பஞ்சாயத்து தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் வருவதால் இஸ்லாமிய மத வாக்குகள் மீது கவனம் செலுத்துவதால் மம்தா பானர்ஜி சமாதான அரசியல் செய்கிறார்.
ரம்ஜான் ரோஜா மீது மட்டுமே முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கவனம் செலுத்துகிறார். அவர் இந்து மத பண்டிகளைகளான நவராத்திரை மற்றும் ராமநவமியை கண்டுகொள்வதில்லை. மேற்குவங்காளத்தில் இந்து மதத்தினர் ஆபத்தில் உள்ளனர். பாஜக எப்போதும் இந்து மதத்தினருடன் துணை நிற்கும். மேலும் இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுப்போம். மேற்குவங்காளத்தின் தற்போதைய சூழ்நிலை பழைய ஜம்மு-காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் போன்று உள்ளது. மேற்குவங்காள முதல்-மந்திரி பதவியில் இருந்து மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும்' என்றார்.