பெண்கள் மீதான தாக்குதல்களை நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம்-கர்நாடக பா.ஜனதா தலைவர்

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத ஆட்சியாக காங்கிரஸ் அரசு மாறிவிட்டது என்று கர்நாடக பா.ஜனதா தலைவர் விஜயேந்திரா கூறியுள்ளார்.

Update: 2024-04-30 12:40 GMT

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா தலைவர் விஜயேந்திரா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

பிரஜ்வால் ரேவண்ணா எம்.பி., பெண்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கியதை கண்டிக்கிறேன். நாங்கள் பெண்களை மதிக்கிறோம். பெண்களை மதிக்கும் கலாசாரம் பா.ஜனதாவில் தான் உள்ளது. நமது நாட்டை பாரத மாதே என்று கூறி நாங்கள் பூஜிக்கிறோம். அதனால் பெண்களை மதிக்கும் விஷயத்தில் நாங்கள் காங்கிரசிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை.

பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். பிரஜ்வால் ரேவண்ணா விவகாரத்தில் மாநில அரசு எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதில் உண்மைகள் வெளியே வரட்டும். தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை.

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத ஆட்சியாக காங்கிரஸ் அரசு மாறிவிட்டது. பெலகாவியில் தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கினர். உப்பள்ளியில் கல்லூரி மாணவி நேகா கொலை செய்யப்பட்டார். இந்த ஆட்சியில் பெண்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விஷயத்தில் இந்த அரசு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது. அதனால் பா.ஜனதாவை குறை சொல்ல காங்கிரசுக்கு எந்த அருகதையும் இல்லை. பிரஜ்வால் ரேவண்ணா விவகாரத்திற்கு மத்தியில் நேகா கொலை விசாரணை திசை மாறக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்