நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் நிதி சார்ந்த பலன்கள் சென்று சேர்கிறது என உறுதிப்படுத்தி வருகிறோம்: பிரதமர் மோடி பெருமிதம்

ஜன்தன் வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடி மைல்கல்லை கடந்துள்ளதற்கு பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்து உள்ளார்.

Update: 2023-08-19 09:30 GMT

புதுடெல்லி,

நாட்டில் கோடிக்கணக்கான மக்களை வங்கி நடைமுறை திட்டத்தின் கீழ் கொண்டு வரும் நோக்கத்துடன் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டில் ஜன்தன் வங்கி கணக்குகள் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கு முன்பு வங்கி துறையில் இணையாமல் இருந்தவர்களுக்கு சேமிப்பு கணக்குகள், காப்பீடு மற்றும் பிற பலன் பெறும் நிதி சார்ந்த சேவைகளை வழங்கும் நோக்கம் கொண்டது இந்த திட்டம்.

இந்த நிலையில், இந்த ஜன்தன் வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடி மைல்கல்லை கடந்து சாதனை படைத்து உள்ளது.

இதுபற்றி வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றில், அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்ற அரசின் உள்ளார்ந்த ஈடுபாட்டை இந்த சாதனையானது சுட்டி காட்டுகிறது என தெரிவிக்கின்றது.

இந்த சாதனையை எட்டியதற்கு பிரதமர் மோடி தனது பாராட்டுகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்ததுடன், இந்த சாதனையில் மகளிருக்கு அதிகாரமளித்தலின் முக்கியத்துவம் பற்றியும் சுட்டி காட்டியுள்ளார்.

இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாகும். இந்த கணக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை நம்முடைய நாரி சக்திக்கானவை என்பது மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது என அவர் கூறியுள்ளார்.

பெண்களின் ஒட்டுமொத்த ஆற்றல் மற்றும் வலிமை ஆகியவற்றை இந்த நாரி சக்தியானது குறிக்கின்றது. இதன்படி பெண்கள் அதிக அளவில், வங்கி கணக்குகளை தொடங்கியுள்ளனர்.

இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இந்த வங்கி கணக்குகளில் 67 சதவீதம் அளவுக்கு கிராமப்புற மற்றும் பிற பகுதியளவு நகர்ப்புற பகுதிகளில் இருந்து தொடங்கப்பட்டு உள்ளன. விளிம்பு நிலையில் இருக்க கூடிய மக்கள் உள்பட அனைத்து தனிநபருக்கும், போதிய மற்றும் முறையான நிதி சார்ந்த பலன்கள், நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று சேர்கிறது என்றும் நாங்கள் உறுதிப்படுத்தி வருகிறோம் என அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்