வயநாடு நிலச்சரிவு: அடையாளம் தெரியாத 67 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம்
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் அடையாளம் தெரியாத 67 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பூஞ்சிரித்தோடு, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய கிராமங்கள் சின்னாபின்னமாகின. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராணுவம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரேடார் கருவிகள், செல்போன் ஜிபிஎஸ் ஆகியவற்றை பயன்படுத்தி காணாமல் போனவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகிறார்கள்.
நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 370-ஆக உயர்ந்துள்ளது. 34 பெண்கள், 36 ஆண்கள், 11 குழந்தைகள் என 81 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்ற 206 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். மேப்பாடியில் உள்ள 17 நிவாரண முகாம்களில் 707 குடும்பங்களைச் சேர்ந்த 2,597 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
வயநாடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 91 முகாம்களில் 10 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வயநாடு பேரழிவை, மாநில பேரிடராக அறிவித்து கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் அடையாளம் தெரியாத 67 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
இதற்காக புத்துமலை பகுதியில் ஹாரிசன் தேயிலை தோட்டம் வழங்கிய இடத்தில், சர்வமத பிரார்த்தனையுடன் 67 பேரின் உடல்களை மொத்தமாக நல்லடக்கம் செய்யும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.