போபால் உயிரியல் பூங்காவில் புலிகளை நோக்கி பார்வையாளர்கள் கற்களை வீசுவதா? - நடிகை ரவீணா தாண்டன் ஆவேசம்
உயிரியல் பூங்காவில் புலிகள் வாழும் பகுதியில் பார்வையாளர்கள் கற்களை வீசுவதாக நடிகை ரவீணா தாண்டன் புகார் கூறியுள்ளார்.;
போபால்,
மத்திய பிரதேச மாநிலம், போபால் வான்விஹார் பகுதியில் தேசிய உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு புலிகளுக்கென தனிப்பகுதி உள்ளது. அந்தப் பகுதியில் கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள புலிகளைப் பார்க்க வருகிற பார்வையாளர்கள், கல்வீசுகிற அநியாயம் அரங்கேறி வருகிறது.
இதை நேரில் கண்டு இந்தி நடிகை ரவீணா தாண்டன் கொதித்துப்போனார். இதுபற்றி அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
"மத்திய பிரதேச மாநிலம் போபால், பான்விஹார் உயிரியல் பூங்காவில் புலிகள் வாழும் பகுதியில் பார்வையாளர்கள் கற்களை வீசுகிறார்கள். அப்படி செய்யாதீர்கள் என்று சொன்னால் சத்தமிட்டு சிரிக்கிறார்கள். அலறுவதும், சிரிப்பதும், கூண்டை அசைப்பதும், கற்களை வீசுவதும் கொடுமை. புலிகளுக்கு பாதுகாப்பு இல்லை" என கூறி உள்ளார்.
இது பற்றி விசாரணை நடத்துவதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் கூறி உள்ளது. உயிரியல் பூங்காவில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் தண்டிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.