சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றிய விஜயபுரா விஞ்ஞானி அபிஷேக் தேஷ்பாண்டே

சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றிய விஜயபுரா விஞ்ஞானி அபிஷேக் தேஷ்பாண்டே கன்னடர்கள் இஸ்ரோவில் சேர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-24 16:18 GMT

பெங்களூரு, ஆக.25-

நிலவில் ஆய்வு செய்ய பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. அந்த விண்கலத்துடன் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் விண்கலத்தில் இருந்து பிரிந்து நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்ததுடன், நேற்று முன்தினம் மாலை வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவை ஆய்வு செய்யும் பணியை இந்தியா வெற்றிகரமாக மேற்கொள்ள உள்ளது. இதற்கு உலக நாடுகளும் இந்தியாவையும், இந்திய விஞ்ஞானிகளையும் பாராட்டி வருகின்றன. இந்த சந்திரயான்-3 திட்டத்தில் கர்நாடகத்தை சேர்ந்த 2 பேர் பணியாற்றியுள்ளனர். ஒருவர் மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகா அஞ்சே சித்தனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரவி பி.கவுடா. மற்றொருவர் விஜயாப்புரா (மாவட்டம்) டவுனில் தாஜ்பாவடி பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் தேஷ்பாண்டே. சந்திரயான் திட்டம் வெற்றி வெற்றதை இரு விஞ்ஞானிகளின் குடும்பத்தினரும், உறவினர்களும், சொந்த ஊர் மக்களும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

இதுகுறித்து அபிஷேக் தேஷ்பாண்டே கூறுகையில், நான் இஸ்ரோவில் பணியாற்றுவதில் பெருமை அடைகிறேன். இஸ்ரோவில் பணியாற்றும் கன்னடர்களின் எண்ணிக்கை மிக குறைவு. சந்திரயான் மட்டுமின்றி அடுத்தடுத்து இஸ்ரோ மேற்கொள்ளும் அனைத்து திட்டங்களும் வெற்றி அடையப்போகிறது. இதற்காக எங்கள் சக விஞ்ஞானிகள் இரவு,பகலாக உழைத்து வருகிறார்கள். எனவே இளைஞர்கள் குறிப்பாக கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் இஸ்ரோவில் சேர வேண்டும். நமது இந்தியாவும், இஸ்ரோவும் சாதனைகளை உலகிற்கு எடுத்துரைத்து உள்ளன. நான் முதலில் பெங்களூருவிலும், அடுத்து சென்னையிலும் தேர்வு எழுதி வெற்றி பெற்று இஸ்ரோ பணிக்கு தேர்வானேன் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்