தசராவை முன்னிட்டு தீ வைத்து எரித்த மக்களை திருப்பி தாக்கிய ராவணன் - வைரலாகும் வீடியோ

ராவணனின் உருவ பொம்மையில் பொருத்தப்பட்டிருந்த பட்டாசுகள் சிதறி வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பொதுமக்களை நோக்கி வரிசையாக பாய்ந்து வந்தன.

Update: 2022-10-06 05:54 GMT

முசாபர்நகர்,

தீமைகளை வென்று தர்மத்தை நிலைநாட்டும் வகையில் இராமாயண காவியத்தில் வரும் ராவணனை ராமர் கொன்றதை நினைவுகூரும் விதமாக தசரா பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா பண்டிகையன்று ஊரில் உள்ள திடல்களில் வைக்கோல் மற்றும் காகித அட்டைகள், பட்டாசுகளால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய அளவிலான ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் உள்ளிட்டவர்களின் உருவ பொம்மையை தீயிட்டு எரிப்பர்.

அந்த உருவ பொம்மை எரியும் காட்சியை கண்டு மக்கள் பரவசம் கொள்வது வழக்கம். அந்த வகையில், நாடு முழுவதும் தற்போது தசரா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி திடலில் நேற்று இரவு ராவணனின் உருவ பொம்மையை உள்ளூர் மக்கள் தீயிட்டு எரித்து அக்காட்சியை கண்டு களித்தனர்.

அப்போது, அந்த பொம்மையினுள்ளே பொருத்தப்பட்டிருந்த பட்டாசுகள் சிதறி வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பொதுமக்களை நோக்கி வரிசையாக பாய்ந்து வந்தன. இதைகண்டு பீதியடைந்த மக்கள், அதிலிருந்து தப்பிக்க ஓட்டம்பிடித்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசாரும் செய்வதறியாமல் திகைத்தவாறு ஓடினர்.

இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த பட்டாசு கலவரம் முடிவதற்குள்ளாக அந்த மைதானத்துக்குள் முரட்டுத்தனமாக பாய்ந்துவந்த காளை நிலவரத்தை மேலும் கலவரமாக்கியது. உடனடியாக போலீசார் காளையை பிடித்து அழைத்துச் சென்றனர்.

இதேபோல், அரியானா மாநிலத்தின் யமுனாநகரில் நேற்று நடைபெற்ற தசரா விழாவில் எரிந்து கொண்டிருந்த ராவணனின் உருவபொம்மை பொதுமக்கள் இருந்த பகுதியை நோக்கி சரிந்து விழுந்தது. நல்லவேளையாக, மக்களுக்கு எந்தவிதமான அசம்பாவிதமும் நேரவில்லை என்று யமுனாநகர் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்