6-ந் தேதி சர்வதேச வேட்டி தினம்; தமிழர்களின் பாரம்பரிய உடைகள் அணிவதில் ஈர்ப்பு இருக்கிறதா?
6-ந் தேதி சர்வதேச வேட்டி தினம் கடைப்பிடிக்கப்படுவதை யொட்டி தமிழர்களின் பாரம்பரிய உடைகள் அணிவதில் ஈர்ப்பு இருக்கிறதா என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:
நாம் அணியும் ஆடைகளே நமக்கு அடையாளம் தருகின்றன. நமது கலாசாரத்தைச் சொல்கின்றன. தமிழர்கள் என்பதை வேட்டி, சட்டைகளே வெளிக்காட்டுகின்றன.
உலக பாரம்பரியங்களை பொக்கிஷமாக பாதுகாக்கும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட 'யுனஸ்கோ' அமைப்பு தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, நாகரிகத்தை நன்கு உணர்ந்து வேட்டிக்கு உலக அங்கீகாரத்தை அளித்து இருக்கிறது. 2016-ம் ஆண்டு அந்த அமைப்புதான் ஜனவரி 6-ந்தேதியை சர்வதேச வேட்டி தினமாக அறிவித்தது.
அதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் வேட்டி அணிய வேண்டும் என்ற உணர்வு இளைய தலைமுறையினரிடம் மேலோங்கி வருகிறது. அதற்காக யுனஸ்கோ அமைப்பை பாராட்ட வேண்டும்.
இதில் வேடிக்கை என்னவென்றால்? இங்கிலாந்துக்காரர் சொல்லி வேட்டி சட்டையை களைந்து விட்டு பேண்ட் சூட்டுக்கு மாறிய நாம், அமெரிக்காவில் உள்ள நிறுவனம் சொல்லித்தான் மீண்டும் வேட்டியை அணிய வேண்டியது இருக்கிறதே என்பதுதான்!
சரி போகட்டும்! எப்படியேனும் நமது பண்பாடு பாதுகாக்கப்படுவது நல்லதுதானே?
அன்றாட பணிக்கு பேண்ட்-சட்டையில் வரும் அரசு ஊழியர்கள் அன்றைய தினம் மட்டும் வேட்டி-சட்டையில் வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதே போன்று சர்வதேச வேட்டி தினத்தன்று மட்டும் கல்லூரி மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடைகள் அணிந்து வருவதற்கு கல்வி நிறுவனங்கள் பச்சைக்கொடி காட்டி இருக்கின்றன.
வேட்டி அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதோடு சர்வதேச வேட்டி தின கொண்டாட்டம் முடிந்து விடுகிறது. அப்புறம் அந்த வேட்டி, வீட்டு பீரோவின் ஓரத்தில் ஓய்வெடுக்கச் சென்று விடுகிறது.
எனவே சர்வதேச வேட்டி தினம் சம்பிரதாயத்திற்காக கடைப் பிடிக்கப்படுகிறதா? அல்லது இளைய தலைமுறையினரிடம் பாரம்பரிய ஆடைகள் அணிய வேண்டும் என்ற ஈர்ப்பை ஏற்படுத்துகிறதா? என்பது பற்றிய கருத்துகளை இதோ கீழே பதிவிட்டிருக்கிறார்கள் பாருங்களேன்:-
வேட்டி அணிவது தனி கெத்து தான்
பெங்களூரு ஒயிட்பீல்டுவில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்த பிரசாத்:- "கேரளாவில் கல்லூரி மாணவர்கள் வேட்டி அணிவதை கெத்தாக கருதுகின்றனர். கல்லூரிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளின் போது மாணவர்களும், மாணவர்களுக்கு போட்டியாக மாணவிகளும் வேட்டி அணிந்து வருவார்கள். நானும் கூட கல்லூரி படிக்கும் காலங்களில் வேட்டி அணிந்து இருக்கிறேன். தற்போதும் கோவில்களுக்கு சென்றால் வேட்டி அணிந்து தான் செல்கிறேன். கோவிலுக்கு வேட்டி அணிந்து செல்லும் போது சிலர் நம்மை ஒரு மாதிரி தான் பார்க்கிறார்கள். அதற்காக நமது பாரம்பரியமான உடையான வேட்டியை அணியாமல் இருக்க முடியுமா?. பாரம்பரிய உடைகள் அணிவதை இளைஞர்கள் வழக்கமாக்கி கொள்ள வேண்டும்''.
இந்திராநகரில் வசித்து வரும் மோகன்:- "நமது பாரம்பரிய உடையான வேட்டியை அணிவதில் இன்றைய இளைஞர்கள் அதிக தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு காரணம் கலாசார மாற்றம் தான். வேட்டி அணிந்து வெளியே சென்றால் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இளைஞர்கள் நினைக்கின்றனர். இந்த எண்ணத்தை முதலில் மாற்றி கொள்ள வேண்டும். பொங்கல் பண்டிகையின் போது நமது பராம்பரிய உடையான வேட்டியை அணிவதே நமக்கு பெருமை. வேட்டி அணிவது நமது கலாசாரம், பெருமையை பிரதிபலிக்கிறது. டிப்-டாப் உடைகள் அணிந்து கொண்டு 10 இளைஞர்கள் ஒன்றாக செல்லும் போது, அதில் ஒருவர் மட்டும் வேட்டி அணிந்து சென்றால் அவர் மற்றவர்களிடம் இருந்து கெத்தாக தெரிவார். இன்றைய வாலிபர்கள் வேட்டி அணிய வேண்டுமா? என்று முகம் சுழிப்பதை பார்க்கும் போது வேதனையாக இருக்கும்''.
கேலி-கிண்டல்
கே.ஆர்.புரத்தில் வசித்து வரும் ஜெயசிங்:- "எனக்கு வேட்டி கட்டிகொள்வதில் அதிக ஆர்வம். ஆனால் எனக்கு வேட்டி கட்ட தெரியாது. நான் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செல்லும் போது பேண்ட் தான் அணிந்து செல்கிறேன். சிரமம் இன்றி அணியும் வகையில் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி கூட தற்போது உள்ளது. எனது நண்பர்கள் சிலர் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டியை வாங்கி கட்டியதை பார்த்து உள்ளேன். அந்த வேட்டியை கண்டிப்பாக வாங்கி ஒரு முறையாவது வேட்டி கட்டி கொள்வேன். வேட்டி நமது பராம்பரிய உடை. அதை மறுக்க முடியாது. ஆனாலும் சிலர் இடுப்பில் நிற்காது என்ற காரணத்தால் வேட்டியை கட்ட தயக்கம் காட்டுகின்றனர்''.
பெங்களூரு ஒசரோட்டில் வசித்து வரும் கல்லூரி மாணவர் விஜய்:- "இன்றைய காலக்கட்டத்தில் பெங்களூரு நகரில் என்னை போன்ற கல்லூரி மாணவர்கள் வேட்டி அணிந்து சென்றால் நிச்சயம் கேலி, கிண்டலுக்கு ஆளாகுவார்கள். நவீன காலக்கட்டத்தில் புதிய, புதிய ஆடைகள் அணிவதில் தான் பெருமை. அதற்காக பாரம்பரிய உடை அணிந்தால் பெருமை இல்லை என்று கூறவில்லை. வேட்டிகளை காட்டிலும் பேண்ட் சவுகரியமானது. வேட்டி கட்டி கொண்டு ஓடும் பஸ்சில் ஏற முடியுமா?. ஜீன்ஸ் பேன்ட்டில் கறை படிந்தாலும் கூட பேஷன் என்று சொல்லி விடலாம். வேட்டியில் கறை படிந்தால் அந்த கறை போகாது. பெரிய நகரங்களில் வேட்டி அணிந்து சென்றால் அழுக்கு படிந்து வேட்டி பாழாய் போய் விடும்''.
வேட்டி வாரம்
ஜனவரி 6-ந்தேதி சர்வதேச வேட்டி தினம் என்றாலும் தமிழ்நாட்டில் ஜனவரி 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை வேட்டி வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதுபோல் தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கும் அவர்கள் வேட்டி அணிந்து பண்டிகை நாட்களை கொண்டாடுவதையும், கோவிலுக்கு செல்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். வேட்டி விற்பனையை அதிகரிக்க ஜவுளி நிறுவனங்கள் கவர்ச்சிக்கர சலுகைகளை அறிவித்து உள்ளன.
இளைஞர்கள் சிரமமின்றி அணியும் வகையில் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி, பாக்கெட் வைத்த வேட்டி என்று வேட்டியிலும் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. நாம் பாரம்பரிய உடைகளை தினமும் அணியாவிட்டாலும்கூட விழாக்காலங்களிலும் முடிந்தால் வாரத்தில் ஒரு தினமேனும் அணிவோம் என்றால் நெசவாளர்கள் மட்டும் அல்ல நமது கலாசாரமும் பாதுகாக்கப்படும் என்பதில் மாற்றுக் இருக்க முடியாது.