யு.பி.ஐ. வழியே பணம் செலுத்தி, கடையில் லட்டு வாங்கி சாப்பிட்ட ஆஸ்திரேலிய துணை பிரதமர்
டெல்லியில் உள்ள கடை ஒன்றிற்கு சென்ற ரிச்சர்டு, நிம்பு பானி எனப்படும் மசாலா கலந்த எலுமிச்சை பழ ஜூஸ் வாங்கினார்.;
புதுடெல்லி,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது. ஏற்கனவே 5 முறை உலக கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, தற்போது 6-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.
போட்டியை பார்ப்பதற்காக இந்தியாவுக்கு நேற்று வந்து சேர்ந்த ஆஸ்திரேலியாவின் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு மந்திரியான ரிச்சர்டு மார்லசுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு, பிரதமர் மோடியுடன் ஒன்றாக கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்தார். அவர், இன்று டெல்லியில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றார்.
அவருக்கு டெல்லியின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. டெல்லியில் தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அவர் அஞ்சலி செலுத்தினார். கிரிக்கெட் விளையாடியும் ஆச்சரியப்படுத்தினார்.
இதன்பின்னர், டெல்லியில் உள்ள கடை ஒன்றிற்கு சென்ற ரிச்சர்டு, நிம்பு பானி எனப்படும் மசாலா கலந்த எலுமிச்சை பழ ஜூஸ் வாங்கினார். தெருவோர கடை ஒன்றில், ராம் லட்டு ஒன்றை வாங்கி சாப்பிட்டார். இதற்கு யு.பி.ஐ. வழியே பணம் செலுத்தினார்.