உ.பி.: நகை கடையில் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளை கும்பல்; பரபரப்பு வீடியோ
உத்தர பிரதேசத்தில் நகை கடை ஒன்றில் கையில் துப்பாக்கியுடன் முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் நுழைந்த பரபரப்பு வீடியோ வெளிவந்து உள்ளது.;
லக்னோ,
உத்தர பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் ஜக்ருதி விஹார் பகுதியில் மதுபான் பப்புதம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நகை கடை ஒன்றிற்குள் கொள்ளை கும்பல் ஒன்று புகுந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி வீடியோ காட்சிகள் வெளிவந்து உள்ளன. இதன்படி, கடையில் இருந்து அதன் உரிமையாளர் வெளியே வந்து, தண்ணீர் குடித்து கொண்டு இருக்கிறார்.
அப்போது, அந்த வழியே கையில் துப்பாக்கியுடன் முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் ஒன்று வருகிறது. அவர்கள் திடீரென அந்த நகை கடைக்குள் நுழைகின்றனர்.
இதனை வாசலில் நின்று கவனித்த உரிமையாளர் ஒருவரை தடுக்க முற்படுகிறார். எனினும், ஆயுதம் வைத்திருந்த நபர் அத்துமீறுகிறார். இதனால், உரிமையாளர் உடனே கடையில் இருந்து கீழே குதித்து தப்புகிறார்.
அதன்பின்னர், கூச்சல் போடுகிறார். ஆட்கள் நிறைய பேர் வந்து செல்லும் தெருவில், பகல் வேளையில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் முறியடிக்கப்பட்டது. அந்த கும்பல் உடனடியாக அந்த பகுதியில் இருந்து தப்பித்து சென்றது.
இதுபற்றி நகை கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்து உள்ளார். இதனை தொடர்ந்து கவிநகர் உதவி காவல் ஆணையாளர் அபிஷேக் ஸ்ரீவாஸ்தவா கூறும்போது, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.