உக்ரைன் போர்; எண்ணெய் எங்கே வாங்க வேண்டுமென அழுத்தம் தரப்பட்டது: மத்திய மந்திரி பேச்சு
குஜராத்தில் பேசிய மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர், உக்ரைன்-ரஷிய போரின்போது எண்ணெய் எங்கே வாங்க வேண்டும் என்ற அழுத்தம் தரப்பட்டது என கூறியுள்ளார்.
வதோதரா,
குஜராத்தில் வதோதரா நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு இன்று பேசினார். அவர் கூறும்போது, உக்ரைன்-ரஷிய போரின்போது பெட்ரோல் விலை இரட்டிப்படைந்தது. நாம் எங்கிருந்து எண்ணெய்யை வாங்க வேண்டும் என்று நமக்கு அழுத்தம் தரப்பட்டது.
ஆனால், நமது நாட்டுக்கு எது சிறந்ததோ அதனை செய்ய வேண்டும் என்ற வகையில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் பார்வை இருந்தது. அழுத்தம் தரப்பட்டால், நாம் அதனை எதிர்கொள்ள வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
ரஷிய-உக்ரைன் போரின்போது, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகிய இருவரையும் தொலைபேசி வழியே அழைத்து போர்நிறுத்த ஒப்பந்தம் சில காலம் வரை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
அதனால், நம்முடைய மாணவர்களை பாதுகாப்புடன் வெளியேற்ற முடியும் என்பதற்காக. இதன்படி, போர் சூழலில் இருந்த இந்திய மாணவர்கள் சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர் என கூறியுள்ளார்.