போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கோர்ட்டில் பணியாற்றிய பெண் ஊழியர் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம்

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கோர்ட்டில் பணியாற்றிய பெண் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-17 15:17 GMT

சிவமொக்கா;

போலி சான்றிதழ்கள் கொடுத்து...

சிவமொக்கா டவுன் மேதார் தெருவை சேர்ந்தவர் மஞ்சப்பா. இவர் தீர்த்தஹள்ளியில் உள்ள முதன்மை கூடுதல் கோர்ட்டில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் கோர்ட்டில் பணி செய்பவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி சிவமொக்கா கோர்ட்டு தலைமை செயல் அதிகாரி லோகேஷ் தலைமையில் நடைபெற்றது.

அப்போது தீர்த்தஹள்ளி கோர்ட்டில் ஊழியராக பணி செய்து வரும் மஞ்சப்பாவின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டபோது, அவருடைய 7-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த சான்றிதழ் போலியானது என தெரியவந்தது.

பணி இடைநீக்கம்

இதுபோல், தீர்த்தஹள்ளி கோர்ட்டில் நோட்டீசு அனுப்பும் பிரிவில் பணியாற்றிய ஒசமனே கிராமத்தை சேர்ந்த தீர்த்தம்மா என்ற பெண்ணின் சான்றிதழ்களும் போலியானது என தெரியவந்தது. இவர் 2004-ம் ஆண்டு பணியில் சேர்ந்து இருந்தார். இதையடுத்து போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்து அரசு பணியில் சேர்ந்த மஞ்சப்பா மற்றும் தீர்த்தம்மா ஆகிய 2 பேரையும் பணி இடைநீக்கம் செய்து சிவமொக்கா தலைமை செயல் அதிகாரி லோகேஷ் உத்தரவிட்டார்.

மேலும் அவர்கள் மீது ஜெயநகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்