சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் கண்ணிவெடி தாக்குதல்: பாதுகாப்புப்படையினர் 2 பேர் பலி
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் பாதுகாப்புப்படையினர் 2 பேர் உயிரிழந்தனர்.;
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டம் சில்கர் - டிகல்குடம் பகுதிகளுக்கு இடையேயான சாலையில் பாதுகாப்புப்படையினர் இன்று மாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பைக் மற்றும் லாரியில் சென்றுகொண்டிருந்தபோது அவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து நக்சலைட்டுகள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தினர்.
சாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி மீது பாதுகாப்புப்படையினர் பயணித்த வாகனம் ஏறியுள்ளது. இதில் வாகனம் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் பாதுகாப்புப்படை வீரர்கள் விஷ்னு (வயது 35), சைலேந்திரா (வயது 29) ஆகிய இரு வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து தாக்குதல் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.