மானை வேட்டையாடி இறைச்சியை விற்க முயற்சி; 2 பேர் கைது
மடிகேரி அருகே, மானை வேட்டையாடி இறைச்சியை விற்க முயற்சித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குடகு;
குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா ஐகோலா கிராமத்தைச் சேர்ந்தவர் அஜீஜ். இவரது நண்பர் ஹமீது. இவர்கள் இருவரும் அக்கம்பக்கத்து வீடுகளில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு கடமான் இவர்களது வீடு அமைந்திருக்கும் பகுதியில் உள்ள ஒரு காபித்தோட்டத்திற்கு வந்துள்ளது. அதைப்பார்த்த இருவரும் தங்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கியால் அந்த மானை சுட்டுள்ளனர்.
இதில் குண்டு பாய்ந்த அந்த மான் பரிதாபமாக செத்தது. இதையடுத்து அந்த மானின் உடலை கைப்பற்றிய இருவரும் அதை இறைச்சியாக்கி விற்பனை செய்ய முயன்றனர்.
இதுபற்றி அறிந்த விராஜ்பேட்டை மற்றும் மடிகேரி வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து 2 பேரையும் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.